வித்தியாசமான தோற்றத்தில் திரிஷா

முன்னணி கதாநாயகிகள் காதல் கவர்ச்சி என்பதை கடந்து சவாலான கதாபாத்திரங்களில் தோன்ற ஆர்வம் காட்டுகின்றனர். அதுமாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அந்த படங்கள் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை நிகழ்த்துகின்றன. இதனால் டைரக்டர்கள்,கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை மட்டும் வைத்து கதைகளை உருவாக்குகிறார்கள்.  அனுஷ்கா ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் அவரை முன்னிலைப்படுத்தி பல படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை கூட்டி குண்டான பெண்ணாக வந்து ஆச்சரியப்படுத்தினார். ‘ருத்ரமாதேவி‘ ‘பாகுபலி’ படங்களில் ராணியாக வந்தார். இதற்காக பிரத்யேகமாக பயிற்சியாளர்கள் வைத்து குதிரையேற்றம் வாள் சண்டைகள் கற்றார்.  நயன்தாரா ‘மாயா’ படத்தில் பேயாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காதுகேளாத பெண்ணாக வந்து அசத்தினார். தற்போது திரிஷாவும் மோகினி என்ற பெயரில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தயாராகும் படத்தில் கயவர்களை அழிக்கும் நல்ல பேயாக மிரட்ட வருகிறார். காளி கோலத்தில் ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக திரிஷா தோன்றும் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முந்தைய படங்களில் இதுபோன்று மாறுபட்ட வேடங்களில் அவர் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மாதேஷ் டைரக்டு செய்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துள்ளது.  சென்னை மற்றும் பழனி பகுதிகளில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜனவரியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். தனது திரையுலக வாழ்க்கையில் மோகினி திருப்புமுனை படமாக இருக்கும் என்று திரிஷா எதிர்பார்க்கிறார்.