விக்டோரியா மெமோரியலின் பெயரை மாற்றி ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும்

கோல்கத்தா துறைமுகத்தை தொடர்ந்து விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி, ராணி லட்சுமிபாய் மஹால் என பெயர் சூட்ட வேண்டும் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன் சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜன.,12 அன்று நடைபெற்ற கோல்கத்தா துறைமுகத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது பேசிய பிரதமர் மோடி, கோல்கத்தா துறைமுகத்திற்கு, பா.ஜ., முக்கிய தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான சுப்ரமணியன் சாமி, இதே போன்று விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி ராணி லட்சுமி பாய் மஹால் என வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன். நமக்கு தெரிந்த வரலாற்றை மறுஆய்வு செய்ய வேண்டும். விக்டோரியா மெமோரியல் என்பதை ராணி ஜான்சி ஸ்மார்க் மஹால் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். 1857 ல் ஜான்சி ராணிக்கு துரோகம் செய்து தான் ராணி விக்டோரியா, இந்தியாவை கைப்பற்றினார். 90 ஆண்டுகள் இந்தியா கொள்ளையடிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.