வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து ஓபிஎஸ்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது.

இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகம், உறவினர் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தசோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக முக்கிய ஆவணங்களும் மற்றும் கட்டுக்கட்டாக ரொக்க பணமும் சிக்கின.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக இதுவரை ரூ.89 கோடி வரை வினியோகம் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த ஆதாரங்களை எல்லாம் வருமான வரித்துறையினரிடம் இருந்து பெற்ற தேர்தல் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தேர்தல் கமிஷன் அழைப்பின் பேரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டெல்லி சென்றனர். நேற்று காலை 10 அணி அளவில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்ற அவர்கள் முதலில் தமிழக பொறுப்பை கவனிக்கும் துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்காவை சந்தித்து ஆர்.கே.நகர் தொகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்தும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்தும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி ராஜேஷ் லக்கானியுடனும், விக்ரம் பத்ராவுடனும் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்பாக கிடைத்த விவரங்களை அவரிடம் தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று இரவு 7 மணி வரை நடந் தது.

இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் அதிரடியாக ரத்து செய்தது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று நள்ளிரவு வெளியிட்டது.

தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்த போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசு பொருட் களும் தாராளமாக வழங்கப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டதால் அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டு, பின்னர் அந்த தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோல் இப்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தததற்கு அ.தி.மு.க அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கண்டம் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் ரத்து செய்யபட்டதற்கு முன்னாள் முதல-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது; மிக விரைவில் தேர்தல் நடைபெறும்.வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யபட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.