வல்லரசுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மீள்வதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்கிறார் மைத்திரி

வல்லரசு நாடுகள் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஆக்கிரமிப்பு போட்டித்தன்மையை முன்னெடுத்துள்ளன. ஆகையால் அந்த வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கையை பாதுகாக்க நாம் தயாராக வேண்டும். ஊலகில் வல்லரசு நாடுகள் என்று தங்களைத் தாமே சொல்லிக்கொள்ளும் நாடுகள் சில உள்ளன. ஆனால் சில நாடுகள் மிகவும் அமைதியான முறையில் இருந்து கொண்டே காய்களை சரியானமுறையில் நகர்த்தி உலகின் வளர்முக நாடுகளை நாசம் செய்கின்றன.
இவ்வாறு நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இலங்கையின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
“நாட்டில் தினமும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எமது அரசாங்கம் அவற்றை பல சவால்களுக்கு மத்தியில் அணுகுகின்றது. இந்த சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் புத்தி ஜீவிகளும் பல விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். ஆனால் எமக்கு முன்னால் பிரச்சனைகள் தோன்றும்போது எமது விமர்சனங்கள் எந்த வகையிலும் உதவப் போவதில்லை. நல்லஆலோசனைகளும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளுமே எமக்குத் தேவைப்படுகின்றன என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வல்லரவுநாடுகள் தமது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக பல்வேறு காரியங்களை செய்யத் தொடங்கியுள்ளன. வல்லரசு நாடுகளுக்கு மத்தியிலும் பலத்த போட்டிகள் நிலவுகின்றன. இவற்றை அதிகாரப்போட்டிகள் என்று நாம் நோக்குகின்றபோது, அவை எமது இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரிய சவாலாகவே உள்ளன. எனவே உலகின் வல்லரவு நாடுகள் தொடர்பில் நாம் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளின் பிடியிலிருந்து எமது நாட்டைக் காக்க நாம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஆந்த நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மீள்வதற்கு ஆயுதங்கள் எமக்கு உதவமாட்டா என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். அறிவினாலும், சாதுரியத்தாலும் தந்திரமான போக்கினாலும் மட்டுமே நாம் அவற்றைத் தடுக்க வேண்டும். எனவே எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் நாம் எமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும். ஆதற்கு ஒற்றைஆட்சி முறையே சிறந்த வழியாகும். இதை நாம் உலகின் பல வல்லரசு நாடுகளுக்கு எடுத்துரைத்துள்ளோம். ஓற்றையாட்சி மூலம் நான் ஜனாதிபதி என்ற வகையில் இலங்கையின் சுயாதீனத்தை தொடர்ந்தும் பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கின்றேன்” என்றார் ஜனாதிபதி மைத்திரி.