வருமான வரித்துறை சோதனை தலைமை தேர்தல் அதிகாரி அவசர ஆலோசனை, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தா?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை பல்வேறு வகையில் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார்களை குவித்த வண்ணம் உள்ளன. வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது அனைத்து கட்சியினருமே புகார் கூறியுள்ளன. ஆனால் இந்த புகார்களை டி.டி.வி. தினகரன் மறுத்தார். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்தே பல நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது.

இருப்பினும் பணப்பட்டுவாடா கட்டுப்படுத்த முடியவில்லை என அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு தொடர்ந்தது.

பணம் பட்டுவாடா புகரை அடுத்து தலைமை தேர்தல் கமிஷன் டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரியாக இயக்குனர்களில் ஒருவரான விக்ரம் பத்ராவை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது. அவர் நேற்று சென்னை வந்து ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தும் பொறுப்பை ஏற்றார். 100-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் துணை நிலை ராணுவம் குவிக்கப்பட்ட பிறகும் பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்று இன்று அவர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரொக்கப் பணம் பிடிப்பட்டுள்ளது.

மேலும் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆவணங்களும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா சென்னையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்பட உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டு உள்ளனர். பணப்பட்டுவாடா தொடர்பாக வெளியாகி உள்ள ஆவணங்கள் தொடர்பாக அவர்கள் ஆலோசிக்க கூடும் கூறப்படுகிறது. ஆர்.கே. நகரில் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடந்திருக்கும் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை திட்டமிட்டபடி முறையாக நடத்தமுடியுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.