வன்னி மண்ணில் அளப்பரிய தார்மீகப் பணியாற்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம்

எமது தாயகத்தில் தமிழர் பிரதேசங்களில் மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட பகுதிகளாக விளங்கும் வன்னி மண்ணும் அதனைச் சார்ந்த பிரதேசங்களும் பல்வேறு உதவிகளும் அணைப்பும் தேவையான பகுதிகளாக காணப்படுகின்றன. அங்கு உதவிகளும் உளரீதியான பாதுகாப்பும் தேவைப்படும் பிரிவினராக குழந்தைகளும் சிறுவர் சிறுமிகளும் ஆண் பெண் முதியோர்களும் உள்ளனர். அவர்களில் பலர் யுத்தம் காரணமாக எதிர்கொண்ட உடல் ரீதியானதும் உள ரீதியானதுமான பாதிப்புக்கள் பலரை மன நோயாளர்களாகவும் மாற்றியுள்ளன.


இவ்வாறான மூன்று பிரிவுகளுக்குள் அடங்கும் எமது உறவுகளை பாதுகாக்கும் தார்மீகப் பணிகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்களே எமது தமிழர் மண்ணில் இடைவிடாத பணிகளைச் செய்து வருகின்றன. அவ்வாறான நிறுவனங்களில் வவுனியாவில் இயங்கிவரும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் அமைப்பின் சேவைகள் மற்றும் பணிகள் தொடர்பாக எமது வாசக அன்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு இவ்வார கதிரோட்டத்தை சமர்ப்பணம் செய்கின்றோம். சிறந்த தர்மப் பணியாற்றும் இந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் தொடர்பான விபரமான கட்டுரையொன்றை எமது உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதும் எண்ணம் இருந்தாலும் இந்த விடயத்தை உடனடியாகப் பதிவு செய்வதே எமது நோக்கமாகும்.

சில நாட்களுக்கு முன் இந்த அருளகத்திற்கு சென்றிருந்த நாம் அங்கு உள்ளத்தை உருக்கும் வகையில் பணியாற்றும் பண்பாளர்களைக் கண்டு நெகிழ்ந்து போனோம். பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் யுத்தத்தில் தங்கள் தாய் தந்தையரை இழந்த இளம் வயதுப் பிள்ளைகளும் அதற்கு மேலாக யுத்த காலத்தில் முதியோர் இல்லங்களிலிருந்து இராணுவத்தால் கொண்டுவரப்பட்ட முதியோரையும் பாதுகாக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துச் செயற்படும் இந்த “அருளகம்” உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்பட வேண்டும் என்ற நோக்கமே இந்த பதிவாகும். குறிப்பாக நீதி மன்றத்தினால் ஒப்படைக்கப்படும் குழந்தைகளை கைகளில் எடுத்த நேரம் தொடக்கம் அவர்களை கண்மணிகள் போலக் காக்கும் தார்மீகப் பண்பு இவர்களுக்கு எங்கிருந்து கிட்டியது என்ற கேள்வியே எங்கள் முன் தோன்றியது.
வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகத்தின் சமூகப்பணிகள் 2009ம் ஆண்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லிவிட முடியாது. ஆரம்பத்தில் வவுனியாவில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தை ஸ்தாபித்து சமயப் பணியை தொடங்கிய உயர்திரு ஆறுமுகம் நவரத்தினராசா அவர்களும் அவரது சக இயக்குனர்களும் இன்று அந்த பிரதேசத்தின் தேவை கருதி குழந்தைகள் காப்பகம், சிறுவர் சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் காப்பகம் ஆகியவற்றை இயக்கி வருகி;ன்றனர். முக்கியமாக திருவாளர் ஆறுமுகம் நவரத்தினராசா மற்றும் அவரது சகோதரர் ஆறுமுகம் உமாதேவன் ஆகியோரது சேவைகள் மதிக்கப்பட வேண்டியவை. வவுனியாவில் இயங்கும் இந்த பாதிக்கப்பட்ட மக்களைக் காக்கும் அருளகத்திற்கு தங்கள் அன்பளிப்புக்களை வழங்க விரும்புவோர் 94776567827 அல்லது 94778436960 ஆகிய இலக்கங்களை அழைக்கலாம். சாதாரணமாக ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை தனியொரு மனிதராக ஆற்றும் திரு நவரத்தினராசா அவர்களையும் அவரது சகாக்களையும் பாராட்டு;கின்றோம்.