வடக்கு வாழ் தமிழர்களின் காவலர் விக்கினேஸ்வரனை அடித்து விரட்டச் சொல்லுகின்றான் மைத்திரியிஅமைச்சன் தயா ஸ்ரீ ஜய சேகர

இலங்கையில் தமிழர் தாயகம் என்று அழைக்கப்படும் வடக்கு மண்ணில் இயங்கிவரும் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு.விக்னேஸ்வரன், ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி. கொழும்புத் தலைநகரில் பல ஆண்டு காலமாக சைவத்தையும் தமிழ் மொழியையும் காத்துவரும் இந்து மாமன்றம் மற்றும் அது போன்றபல அமைப்புக்களின் காப்பாளராகவும் பணியாற்றி இடைவிடாத் தமிழ்த் தொண்டாற்றி வருகின்றார் அந்தப் பெருமகனார்.

இவ்வாறான ஒரு உயர்ந்தவரை “அடித்துவிரட்டுங்கள்” என்று காட்டுமிராண்டித் தனமான கூச்சலை எழுப்பியுள்ளான், தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவன். அவன் பெயர் தயாஸ்ரீ ஜயசேகர. மற்றவர்களுக்கு மரியாதை செய்வது எவ்வாறு என்று அறியாத இந்த அமைச்சன், எமது முதலமைச்சர் பேசுகின்ற விடயங்கள் அல்லது அவர் விடுக்கின்ற அறிக்கைகள் இந்த அமைச்சனுக்கு “மூக்கில் கோபத்தைகொண்டு வருகின்றனவாம். ஆதனால் தான் இந்த அமைச்சன் மரியாதை இல்லாமல் பேசுகின்றான்.
எமது முதலமைச்சர் அண்மையில் கனடா வந்து திரும்பிய பின்னர் யாழ்ப்பாணத்திலும் ஏனைய சில மாவட்டங்களிலும் பல பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். அவர் அண்மையில் போர்க்குற்றங்கள் புரிந்த இராணுவம் மற்றும் படையினரை விசாரிப்பதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பது பற்றி தமது வடக்குமாகாண சபை யோசித்து வருகின்றது என்று கூட்டமொன்றில் பேசியுள்ளாராம். இந்த விடயம் அந்தத யாஸ்ரீ ஜயசேகராவுக்கு தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். இவ்வாறு பேசி முதலமைச்சர் இன வாதத்தைத் தூண்டுகின்றாராம். அவரை முதலமைச்சர் பதவியில் விட்டுவைக்கக் கூடாதாம். இது தயாஸ்ரீ ஜயசேகராவுக்கு உள்ள உள்ளக் குமுறல்.

தயாஸ்ரீ ஜயசேகரா ஒன்றை மட்டும் ஏன் உணரத் தவறுகின்றார் என்று நாம் கேட்க விரும்புகின்றோம். 2009ம் ஆண்டு வன்னியிலும் அதனை அண்டியுள்ள பகுதியிலும் இடம்பெற்ற பாரிய தாக்குதல்கள் அங்கு போராளிகளையும் பொது மக்களையும் குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் லட்சக்கணக்கில் கொன்றழித்துள்ளன, இலங்கையின் அரச படைகளும் மற்றும் இந்தியா போன்றநாடுகளின் இராணுவக் கொடியவர்களும். இவ்வாறான மனிதப் படுகொலைகளைச் செய்து போர்க்குற்றம் என்ற கொடிதான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இராணுவக் கொடியவர்களை விசாரிக்க உள்ளூர் நீதிபதிகளை நியமித்தால் அங்கு நியாயம் கிடைக்காது என்பது உலகம் அறிந்த விடயம். ஏன் எமது எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் ஐயாஅவர்கள் கூட வெளிநாட்டு நீதிபதிகள் தான் வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர். ஆனால் தற்போது வெளியில் பேசுவதில்லை. அதனால் அவர் சிங்களஅ ரசியல்வாதிகளுக்கு “நல்லவர்” போலத் தெரிகின்றார்.

ஆனால் எமது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மனந்திறந்து பேசுகின்றார். உண்மையை விளக்குகின்றார். சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் நன்கு விளங்க வேண்டும் என்பதற்காக, சிங்களமொழியில் தென்னிலங்கை ஊடகங்களுக்கு பேட்டிகள் வழங்குகின்றார். இவ்வாறான வெளிப்படைத் தன்மை உள்ள ஒரு தமிழர் தலைவரை “அடித்துவிரட்டுங்கள்” என்று காட்டுமிராண்டித் தனமாகப் பேசுவதற்கு இந்த “துணிச்சலை” கொடுத்தது யார் என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. தான் சார்ந்த இனத்தின் அவலத்தைப் போக்கவும், துன்பியல் படலத்திலிருந்து தனது மக்கள் மீண்டு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தொடர்ந்தும் எமது வடக்கு மக்களின் குரலாகவே ஒலிக்க வேண்டும் என்றும், அவரது சேவை எமதுமக்கள் தமது இன்னல்களில் இருந்து விடுபடும் நாள் வரையும் அவர்களுக்கு கிட்ட வேண்டும் என்றும் நாம் பிரார்த்தனை செய்வோமாக!