வங்கி அதிகாரி போல் நடித்து கவனத்தை திசை திருப்பிய நபர்: ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்து மாயம்

ஆட்டோவுக்கு தவணை கட்ட வந்த தந்தை மற்றும் மகனின் கவனத்தை திசைதிருப்பி வங்கி அதிகாரி போல் நடித்து பணத்தைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஷெனாய் நகர், அருணாச்சலம் தெருவில் வசிப்பவர் முனுசாமி (50). இவரது மகன் சரண் குமார் (20). இவர்கள் சொநதமாக ஆட்டோ வைத்துள்ளனர். ஆட்டோவை நியூ ஆவடி சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் நிதியுதவியுடன் வாங்கி ஓட்டி வருகின்றனர்.

தவறவிடாதீர்

கால்டாக்சி ஓட்டுநர் தற்கொலை; முறையாக விசாரணை நடத்தாத ரயில்வே பெண் எஸ்.ஐ: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
முனுசாமி மாதம் ரூ.11,500/- தவணை கட்ட வேண்டும். வழக்கம்போல் இந்த மாத தவணைத் தொகையை கட்டுவதற்காக தன் மகன் சரண் குமாரை அழைத்துக்கொண்டு இன்று வங்கிக்கு வந்தார் முனுசாமி. வங்கியில் கூட்டம் அதிகம் இருந்தது.

பணம் கட்டும் சலானை வாங்கி மகன் சரண் குமார் அதைப் பூர்த்தி செய்துள்ளார். பணம் கட்டும் இடத்தில் கும்பல் அதிகம் இருந்தது. அப்போது ஒரு டிப்டாப் நபர் அங்குள்ளவர்களை வரிசையில் நில்லுங்கள், சலானைக் காட்டுங்கள், பணம் போட வந்தீர்களா? எடுக்க வந்தீர்களா? என அதிகாரத் தோரணையில் கேட்டபடி முனுசாமி அருகில் வந்துள்ளார்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். ஆட்டோவுக்கு லோன் பணம் கட்ட வந்தேன் என்று கூறியுள்ளார். லோன் பணத்துக்கு வேற கவுன்ட்டரில் பணம் கட்ட வேண்டும். சலானில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டித்தர வேண்டும். ரெவின்யூ ஸ்டாம்ப் எங்கே என்று கேட்டுள்ளார்.

முனுசாமி திருதிருவென விழித்துள்ளார். லைன் கிட்ட வந்து கவுன்ட்டரில் வந்து எங்கள் உயிரை வாங்க வேண்டியது என்று சிடுசிடுத்தபடி போய் ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிட்டு வாங்க சார் என்று முனுசாமியை அனுப்பியுள்ளார்.

முனுசாமி மகனிடம் சொல்லிவிட்டு ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கச் சென்றார். மகன் சரண் குமார் சலானைப் பூர்த்தி செய்துவிட்டு தந்தைக்காகக் காத்திருந்தார். வங்கி ஊழியர்கள் பணியாற்றும் கவுண்டர் அருகிலிருந்து மீண்டும் அங்கு வந்த அந்த நபர் என்னப்பா சலானில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிவிட்டாயா எனக் கேட்டுள்ளார்.

இல்ல சார், அப்பா இன்னும் வரவில்லை என்று சரண் குமார் கூற, என்னப்பா நீ நேரம் ஆகுது என சலித்துக்கொண்ட அவர் பணத்தை இங்கு கொடு நீ சீக்கிரம் போய் உங்க அப்பாவை கூட்டிக்கிட்டு இந்த கவுண்டருக்குள்ள நேரா வந்துவிடு என்று பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் வங்கியின் கவுன்ட்டருக்குள் சென்றுள்ளார்.

வங்கி அதிகாரி நமக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார் என்கிற சந்தோஷத்துடன் சரண் குமார் ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கச் சென்ற தந்தையைத் தேடிச் சென்றார். பின்னர் ரெவின்யூ ஸ்டாம்புடன் இருவரும் வங்கிக்கு வந்தனர். வங்கி ஊழியர்கள் பணியாற்றும் கவுன்ட்டருக்கு சென்ற தந்தையும் மகனும் அந்த அதிகாரியைத் தேடியுள்ளனர்.

ஆனால் யாரையும் காணவில்லை. அவரது அடையாளத்தைச் சொல்லிக் கேட்டுள்ளனர். அப்படி ஒரு ஆளே வங்கியில் வேலை செய்யவில்லை. வங்கிக்குள் மேனேஜரைப் பார்க்கக்கூட யாராவது கவுன்ட்டருக்குள் வந்துவிட்டு வெளியே வருவார்கள். அவர்களை எல்லாம் வங்கி அதிகாரிகள் என நம்புவதா? என கேட்ட வங்கிப் பணியாளர்கள் போய் போலீஸில் புகார் கொடுங்கள் என்று அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து டி.பி.சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது ஏமாற்றிய நபரை சரண் குமார் அடையாளம் காட்டினார். இதையடுத்து அந்த நபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

வங்கிக்கு வருபவர்கள் தங்களை இடைமறித்துப் பேசும் நபர்களை நம்பாமல் வங்கியில் உள்ள அலுவலர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்களை தொடர்புகொண்டு உதவி பெறும்படி போலீஸார் அறிவுறுத்தினர்.