லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் பலி !!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது.

இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியாக மேற்கு கரை உள்ளது. இப்பகுதியின் அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது.

இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த மோதலில் காசா முனையில் 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும் ( கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) என மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா மீதான தாக்குதலை கண்டித்து மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையை கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு படைனர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேற்குகரையை சேர்ந்த பாலஸ்தீனர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், காசா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் போராட்டம் வெடித்தது. இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நேற்று போராட்டக்காரர்கள் குவிந்தனர்.

அந்த போராட்டக்காரர்கள் லெபனானில் இருந்து அத்துமீறி இஸ்ரேலுக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை தடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு படைனர் முற்பட்டனர்.

அப்போது, லெபனான் போராட்டக்கார்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க இஸ்ரேலிய பாதுகாப்பு படைனர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் லெபனான் போராட்டக்கார்கள் 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 1 நபர் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலையடுத்து, இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.