லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறையாக குறைக்கின்றனர்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

லஞ்சத்தை கோடிக்கணக்கில் வாங்கிவிட்டு பஸ் கட்டணத்தை சில்லறை சில்லறையாக குறைக்கின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க விஜயகாந்த் ஆலந்தூரில் இருந்து திரிசூலத்துக்குப் பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ’மதுரைக்கு பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.700 கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டு செல்வதற்கு பதில், நான் ரூ.500 அபராதம் செலுத்திவிட்டு செல்கின்றேன்’ என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை.

பொதுமக்களுக்கு இடையூறு பண்ண கூடாது என்று நினைப்பவன். அதனால்தான் சாலை மறியல், ரயில் மறியல் வேண்டாம் என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தேமுதிகவின் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூரில் பிரேமலதா

தேமுதிக சார்பில் நேற்று திருவள்ளூர் பஜார் வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மாட்டு வண்டியில் வந்து பங்கேற்றார் .

ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.5,700 கோடி கடனில் இயங்குவதற்கு, பஸ் வாங்குவதில் ஊழல், பணியாளர்களை நியமிப்பதில் ஊழல், அதிமுக மற்றும் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் வேலைக்கே செல்லாமல் சம்பளம் வாங்குவது போன்றவைதான் காரணம். உயர்த்திய பஸ் கட்டணத்தை 5 பைசா, 10 பைசா என பைசா கணக்கில் குறைக்கிறார்கள். லஞ்சத்தை மட்டும் கோடிக் கணக்கில் வாங்குகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.