ரெயில் நிலையத்தில் சோதனை மையத்தில் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் பையுடன் சென்ற சீனப்பெண்!

சீனாவின் டோங்குவான் நகரில் ரெயில் நிலையத்தில் பொருட்களை சோதனை செய்யும் சாவடியில் உள்ள எக்ஸ்-ரேவில் பெண் ஒருவர் தன்னுடைய பையுடன் பெல்டில் அமர்ந்து மறுபுறம் வந்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன்னுடைய பை தன்னை விட்டு சென்றுவிடக்கூடாது என அதனை பிடித்துக்கொண்டு அவரும் எக்ஸ்-ரே இயந்திரத்திற்குள் சென்றுவிட்டார். இது அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி சம்பவமாக இருந்தது. அவர் எக்ஸ்-ரே வழியாக வந்தபோது பதிவான தகவல்கள் மீடியாக்களில் வெளியாகி உள்ளது. இதுவரையில் வீடியோவானது 3 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு உள்ளது.

ரெயில் நிலைய சோதனை சாவடிக்கு வந்த பெண் பணம் வைத்திருந்த பையை சோதனை இயந்திர பெல்டில் வைத்து உள்ளார். பை தன்னைவிட்டு சென்றுவிடக்கூடாது, திருடர்கள் திருடி விடக்கூடாது என அச்சத்தில் பையை பிடித்த வண்ணம் அவரும் பெல்டில் அமர்ந்து உள்ளார்.

டுவிட்டரில் இதுதொடர்பான செய்திகள் கேலியுடன் பகிர்வு செய்யப்பட்டு வருகிறது. பணத்தைவிடவும் உயிர் பெரியது எனவும் கருத்து கூறி வருகிறார்கள். மிகவும் பவுர்புல் இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலையில் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சீனாவில் விமான நிலையங்களை போன்று ரெயில் நிலையங்கள் முக்கியமான பஸ் நிலையங்களில் சோதனை இயந்திரமானது பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. சீனாவில் புதுவருடம் கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல ஆர்வம் செலுத்தி வருகிறார்கள், இதனால் போக்குவரத்து மையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது என செய்திகள் வெளியாகி உள்ளது.