ராமநாதபுரம் ரஜினி மன்ற செயலர் ரூ.5.40 லட்சம் மோசடி செய்ததாக புகார்

ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ரூ.5.40 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது.

ராமேசுவரம் ராமதீர்த்தம் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ராமேசுவரம் அஞ்சல் அலுவலகத்தில் பகுதிநேர அலுவலராக பணிபுரிகிறார்.

இவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலர் பாலநமச்சிவாயம் என்பவர் நிலம் வாங்கித் தருவதாக ரூ. 5.40 லட்சம் மோசடி செய்ததாக எஸ்பியிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து செல்வம் கூறியதாவது: பாலநமச்சிவாயம் மதுரையில் நடத்திவந்த குமரன் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தில், மனை வாங்கும் திட்டத்தில் நான் உட்பட 49 பேர் சேர்ந்தோம். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே 1200 சதுர அடி வீட்டுமனை பதிவு செய்து தருவதாக ஒப்பந்தம் செய்தனர்.

அதன்படி, 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 50 மாதங்கள், மாதம் ரூ. 500 வீதம் செலுத்தினோம். அவர் அளித்த வாக்குறுதிப்படி 50 மாதங்கள் முடிந்தும் வீட்டுமனையை பதிவு செய்து தரவில்லை.

அதனால், பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டும் முழுமையாக பணத்தை திருப்பித் தரவில்லை. நாங்கள் செலுத்தியது ரூ.8 லட்சம். பலமுறை கேட்டபின் பல தவணையாக ரூ. 2.6 லட்சம் தந்துள்ளார்.

மீதமுள்ள ரூ. 5.40 லட்சத்தை தராமல் கடந்த 2 ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார். எனவே அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை வேண்டும் எனத் தெரிவித்தார்.