‘ராஜீவ் கொலையில் உண்மையான சதிகாரர்கள் யார்?’ – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உண்மையான சதிகாரர்கள் யார்? என்ற பேரறிவாளன் கேள்விக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அதில், ராஜீவ் கொலை வழக்கில் நடத்தப்பட்ட விசாரணைகளின் முழு விவரங்கள், அக்கொலைக்காக அரங்கேறிய சதி, தற்போது வரை விசாரணை மேற்கொண்டுவரும் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு ஆகியன குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; அதற்கு உச்சநீதின்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று [டிசம்பர் 15] புதன்கிழமை அன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகய் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

அப்போது பேரறிவாளன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன், ராஜீவ் கொலையை விசாரித்த சிபிஐ, ஒரு பரபரப்பு சார்ந்த விசாரணையாக மட்டுமே அதை நடத்தியது; இந்த கொலையின் பின்னணியில் உள்ள சதி, சதிகாரர்கள் பற்றி விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், ‘ராஜீவ்கொலையின் உண்மையான சதிகாரர்கள் யார்?’ என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தடா நீதிமன்றமே கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ராஜீவ் கொலையின் உண்மையான சதிகாரர்கள் யார்? என்ற பேரறிவாளன் கேள்விக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்தனர்.