ராகுலின் சட்டை விலை ரூ.70,000?

ஷில்லாங் : நாகாலாந்து மாநிலத்துடன் சேர்த்து, 60 இடங்களைக் கொண்ட மேகாலயாவிற்கு பிப்ரவரி 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவருவதற்காக காங்.,சார்பில் அமைதி தொடர்பான இசை நிகழ்ச்சி ஷில்லாங்கில் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்., தலைவர் ராகுல், நீல நிற பேண்ட்டும், கறுப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். கடுமையான குளிரையும் தாங்கக் கூடிய இந்த ஜாக்கெட், சொகுசு உடைகளை விற்பனை செய்யும் பிரிஷ்டிஷின் பர்பெர்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த ஜாக்கெட்டின் விலை ரூ.68,145 என பூமிங்டேல்ஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுலின் இந்த காஸ்ட்லி உடை தொடர்பாக மேகாலயா பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் ராகுலின் போட்டோவுடன் கருத்து பதிவிட்டுள்ளது. அதில், மேகாலயா அரசின் கருவூலத்தை உறிஞ்சி அதன் மூலம் பெரும் ஊழல் செய்ததால் கிடைத்த கறுப்பு பணத்தில் இந்த சூட்-பூட்டை ராகுல் அணிந்துள்ளாரா? எங்களின் குறைகளை கூறுவதற்கு முன், மேகாலயாவில் உங்கள் கட்சி தலைமையிலான திறனற்ற அரசின் செயல்பாடு மற்றும் உங்களின் முரண்பாடான செயல்பாடுகள் குறித்துள் ரிப்போர்ட் கார்டு கொடுக்கலாம் என கேட்டுள்ளனர்.

2015 ம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி, காஸ்ட்லி கோட் அணிந்ததை காங்., கடுமையாக விமர்சித்தது. மோடி, சூட்-பூட் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து காங்., விமர்சித்து வந்தது. மோடி அணிந்த கோட் பின்னர் ஏலம் விடப்பட்டது. ரூ.11 லட்சம் ஆரம்ப விலையாக வைத்து ஏலம் விடப்பட்ட இந்த கோட் ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மோடியை விமர்சித்த ராகுல் இப்போது காஸ்ட்லி ஜாக்கெட் அணிந்ததற்கு என்ன சொல்ல போகிறார் எனவும் பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.