ரமலான் மாதத்தில் கேக் வெட்டியதற்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டார்

பாகிஸ்தான்–இங்கிலாந்து அணிகள் இடையே லீட்சில் நடந்த 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

பாகிஸ்தான்–இங்கிலாந்து அணிகள் இடையே லீட்சில் நடந்த 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. 3–வது நாளுடன் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் லீட்ஸ் மைதானத்தில் தனது 52–வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ் கேக் வெட்டினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரமலான் மாதத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதால் முன்னாள் வீரர்களுக்கு, ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடந்த சம்பவத்துக்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து வக்கார் யூனிஸ் தனது டுவிட்டர் பதிவில், ‘வாசிம் அக்ரமின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டியதற்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். புனித ரமலான் மாதத்திற்கும், நோன்பிற்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எங்களின் மோசமான செயலுக்காக வருந்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.