ரத்து செய்யப்பட்ட சலுகைகள் தர சிறைத் துறை முடிவு?-உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் முருகன்

ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் தரப்படும், பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என சிறைத் துறை தரப்பில் அளித்த வாக்குறுதியையடுத்து, வேலூர் சிறையில் 12 நாட்களாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் கைவிட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 26 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ஜீவசமாதி அடைய விருப்பம் தெரிவித்து சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார்.

இதையடுத்து, கடந்த 18-ம் தேதி முதல் அவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இதனால், சிறையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை எனவும் சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், முருகனின் உறவினர் தேன்மொழி, முருகனின் உயிரைக் காப்பாற்ற சிறைத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முருகனின் உடல் நிலையை மருத்துவக் குழுவினர் நேற்று பரிசோதித்தனர்.

இந்நிலையில், முருகனிடம் சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தினர். ‘ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் திரும்பத் தரப்படும். மகள் திருமணத்தில் பங்கேற்க பரோல் கோரிய மனு பரிசீலனையில் உள்ளது. இதன் மீது அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்’ என உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, 12 நாட்களாக தொடர்ந்த உண்ணாவிரதத்தை நேற்று மாலை முருகன் கைவிட்டார். எனினும், முருகனின் மனைவி நளினி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, சிறைத்துறை டிஐஜி பாஸ்கர் கூறும்போது, ‘ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என முருகன் கோரினார். அது பரிசீலிக்கப்படும் என்றோம். இதையேற்று, உண்ணாவிரதத்தை கைவிட்டார்’ என்றார்.