ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு அவரை பற்றி பேசுகிறேன் : முதல்வர் இ.பி.எஸ்

நடிகர் ரஜினி சொன்னது என்ன அதிசயம் என தெரியவில்லை. அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பிறகு அவரை பற்றி பேசுகிறேன் என முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த நடிகர் ரஜினி, 2021 ல் தமிழக அரசியலில் மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்தி காட்டுவார்கள் எனக்கூறினார். இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், 2021 ல் எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறினார் என தெரியவில்லை. ஒருவேளை அதிமுக ஆட்சி மலரும் என்பதை தான் அதிசயம் என கூறியிருக்கலாம் என்றார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை சட்டப்படி தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

ரஜினி சொன்னது என்ன அதிசயம் என தெரியவில்லை. அவர் எந்த அடிப்படையில் அதிசயம் என கூறினார் என தெரியவில்லை. 2021ல் அதிமுக ஆட்சி தான் மலரும் என்ற அதிசயத்தை அவர் சொல்லியிருக்கலாம். ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு, அவர் குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.

2021 சட்டசபை தேர்தலில், அதிமுகவை சேர்ந்தவர் முதல்வராக பதவி ஏற்பார். லோக்சபா தேர்தலில், அமைந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மறைமுக தேர்தலை ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது. அவர், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, சட்டசபையில் மறைமுக தேர்தலை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

ஸ்டாலின் சொன்னால் சரி என்கிறார்கள். நாங்கள் செய்தால் தவறு என்கின்றனர். தேர்தலில் மக்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களுக்கு ஓட்டுப்போடுவார்கள். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.