ரஜினி அரசியல் பிரவேசம்: தனுஷ் பதில்

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பதிலளித்தார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். தாணு வெளியிடவுள்ளார்.
‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.
இதில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார் தனுஷ். அதில் “‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகத்துக்கும் இரண்டம் பாகத்துக்கும் சில ஒற்றுமைகளும், வித்தியாசங்களும் உள்ளன.
இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தை போன்றே நகைச்சுவை, குடும்பம் மற்றும் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் இருக்கும். அதே நேரத்தில் வலுவான சமூக கருத்தும் இருக்கும். கஜோலை எதிர்மறை கதாபாத்திரம் என முத்திரையிடுவது தேவையில்லை. படத்தில் தங்கள் சித்தாந்தங்களை நம்பும் இரண்டு வேறு கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். அவ்வளவுதான்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, “அவர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என நீங்கள் அபிப்ராயம் வைத்திருக்கிறீர்களா?. எனக்கென ஒரு கருத்து உள்ளது. நான் எனது கருத்தை நம்புகிறேன், நீங்கள் உங்கள் கருத்தை நம்புங்கள், போதும்.” என்று தெரிவித்தார் தனுஷ்.
‘வேலையில்லா பட்டதாரி 2’ பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ஹாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.