ரஜினியை தமிழர் அல்லாதவர் என எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை: திருமாவளவன்

நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்காக தமிழர் அல்லாதவர் என எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று ஒரு தொலைக்காட்சிக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், ”விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தமிழ் தேசிய இயக்கம்தான். திடீரென்று கர்நாடகாவிலிருந்தோ, ஆந்திராவிலிருந்தோ, கேரளாவிலிருந்தோ அல்லது வேறு மாநிலங்களிலிருந்தோ ஒருவர் தமிழகம் வந்து கட்சியைத் தொடங்கி அவர் ஆட்சியைப் பிடிக்க நினைத்தால் நாம் முரண்படலாம்.
ஆனால், ரஜினியைப் பொறுத்தவரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தங்கி வருகிறார். தமிழக மக்களின் உணர்வோடும், அவர்களின் உரிமைகளோடும் இரண்டறக் கலந்திருக்கிறார். தமிழர்களுக்கும் ரஜினிக்குமான உறவு என்பது ஒன்றிப்போய் இருக்கிறது. அதை யாரும் மறுத்துவிட முடியாது.
அப்படிப்பட்ட நிலையில் இந்த நேரத்தில் ரஜினியை அரசியலுக்காக மட்டுமே தமிழர் அல்ல என்று சொல்வதும், தமிழர் அல்லாதவர் என ரஜினியை எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
தேர்தல் அரசியலில், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவது என்று முடிவெடுத்த பிறகு ரஜினியின் நிலைப்பாடு என்ன, கொள்கை கோட்பாடுகள் என்ன, தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன செய்யப் போகிறார் என்பதையெல்லாம் அறிந்த பிறகுதான் அவரிடம் அரசியல் உறவை எப்படி வைத்துக்கொள்ள முடியும் என்பதை தீர்மானிக்க முடியும்” என்றார் திருமாவளவன்.