யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க சர்வதேச அளவில் “ஹத்ராஸ்” சதித்திட்டம் – உத்தர பிரதேச போலீசார்

ஹத்ராஸ் சம்பவத்தை பயன்படுத்தி, மாநிலத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, உத்தர பிரதேச போலீசார் தெரிவித்து உள்ளனர்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த, தலித் பெண், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சந்த்பா போலீஸ் ஸ்டேஷனில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது, பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதித்திட்டம் தீட்டுதல், தேச துரோகம், ஜாதி மற்றும் மத கலவரங்களை துாண்டிவிடுதல், நாட்டின் ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவித்தல் உட்பட, பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.

மாநிலத்தில் ஜாதி கலவரத்தை துாண்டிவிட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சர்வதேச சக்திகள் சில சதி திட்டம் தீட்டி வருவதாகவும், போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.ஹத்ராஸ் போராட்டம் தொடர்பாக, ஒரு இணைய தளம் துவங்கப்பட்டு, அதில், போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்துவது, போலீஸ் தாக்குதல்களை எப்படி சமாளிப்பது போன்ற தகவல்கள் பகிரப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.இந்த இணையதளம் நீக்கப்பட்டு விட்டதாக, போலீசார் தெரிவித்தனர். ‘இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல வாசகங்கள், அமெரிக்காவின் கருப்பினத்தவர்கள் போராட்ட இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டவை’ என, போலீசார்
தெரிவித்தனர்.