“யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி

பல்வேறு முறைகேடு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ” யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.இதனை எடுக்க முடியாமல் இந்த கோயில் நிர்வாகம் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

வாராக்கடன் நிர்வாகச் சீர்கேடு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் தனியார் வங்கியான ‘யெஸ் பேங்க்’ சிக்கியுள்ளது. இதனால் அந்த வங்கி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ‘அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்கலாம்’ என்ற கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் எடுப்பதில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலம் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் நிதி ரூ.545 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளதை எடுக்க முடியாமல் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த டிபாசிட் தொகை இந்த மாதம் காலம் முதிர்ச்சி அடைவதாகவும், இதனை எடுக்க ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றும் மாநில நிதிதுறை அமைச்சகம் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.