யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை: மக்களுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

யுனெஸ்கோ படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகர மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது உயர்ந்த கலாச்சாரத்தில் சென்னையின் பங்களிப்பு மிகவும் மதிப்பானது. யுனெஸ்கோ தனது படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது. இது இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய தருணம். சென்னை மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2004-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, படைப்பாற்றலை காரணியாகக் கொண்டு நிலையான வளர்ச்சியை எய்திட ‘படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு’ ஒன்றை உருவாக்கியது. பல்வேறு சிறப்புகளுக்காக உலகெங்கிலும் இதுவரை 180 நகரங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இசைத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதை பாராட்டி சிறந்த படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியலில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தற்போது சேர்த்துள்ளது. இந்த செய்தியறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக யுனெஸ்கோ அமைப்புக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசைத் துறையில் சென்னையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் யுனெஸ்கோ பாராட்டி அங்கீகரித்துள்ளது நமக்கு பெருமையாகும். சென்னை வாழ் மக்களுக்கும் அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் பாராட்டு

இதுதொடர்பாக, நேற்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்தியப் பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு’ என்று கூறியுள்ளார்.