யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று (ஏப்ரல் 23) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நினைவுத்தூபி பல்கலைக்கழக மாணவ சமூகத்தினால் காலையில் திறந்து வைக்கப்பட்டது.

நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதிக் யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு உடைக்கப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகம் இரவோடு இரவாக இந்த தூபியை தகர்த்திருந்த நிலையில், அன்றிரவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரிய போராட்டம் தொடங்கியது.

இந்த நிலையில், அன்று முதல் தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வலுப் பெற்றன.