யாழ்ப்பாணத்தில் சைவ – புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

முதல்நாள் நிகழ்ச்சியில், வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்ன தேரர் கலந்து கொள்கிறார் ! புத்தர் சிலைகளையும், புத்த பன் சாலைகளையும் அமைப்பதால் மட்டுமே, புத்த சமயத்தையோ புத்தரின் கருத்துக்களையோ பரப்ப முடியாது !

அந்தந்த ஊர் மக்கள் ஒப்புதலின்றி, புத்தர் சிலைகளை எவரும் எந்த இடத்திலும், வைக்கக்கூடாது என வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தன தேரர் கூறியுள்ளார் !

ஏற்கனவே, இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா?

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், கண்டியிலிருந்து வரும் வணக்கத்துக்குரிய, அசுகிரிய பீடாதிபதி கலந்துகொள்கிறார் ! யாழ்ப்பாணம் நாகவிகாரை வணக்கத்துக்குரிய புத்தபிக்கு விமல் தேரர் அவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார் !

புத்தராய்ச் சில புனை துகில் அணிபவரே, புத்த சமயிகளே இல்லாத ஊர்களில் புத்தர் சிலைகளை அமைத்து வருகிறார்கள். தேவையற்ற தொல்லையைத் தருகிறார்கள் என, நாக விகாரையின் புத்த பிக்கு வணக்கத்துக்குரிய விமல தேரர் அவர்கள் கூறியுள்ளார்கள் !

ஏற்கனவே, இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா? சைவரும் மற்றும் புத்தரும் இணைந்தே இலங்கையைக் காப்பாற்றலாம் மேம்படுத்தலாம் !

இந்தப் பூமிப்பந்தில், தமிழ் பெண் ஒருவரைத் தம் கடவுளாக வழிபடும் தமிழரல்லாத ஒரே இனம் புத்த சமயச் சிங்கள இனமே !

கடவுளாக வழிபடுவதுமட்டுமன்றி, ஆண்டுதோறும் கண்ணகிப் பத்தினிக்குப் பெருவிழாக்கள் எடுத்துப் போற்றுகின்ற தமிழரல்லாத ஒரே இனமும் புத்த சமயம் சார்ந்த சிங்கள இனமே !

கோட்டைச் சிங்கள புத்த அரசைக் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர் வீழ்த்த நினைத்தனர் !

கோட்டை அரசன் வீதிய பண்டாரத்துக்கும் சீதவாக்கை அரசன் மாயாதுன்னைக்கும் துணையாக நின்றவர்கள், யாழ்ப்பாண சைவத் தமிழ் அரசர்கள் !

பின்னர் அரசன் வீதிய பண்டாரத்திற்குப் புகலிடம் கொடுத்ததாலும், கோட்டை அரசின் களஞ்சியத்துக்குப் பாதுகாப்புக் கொடுத்ததாலும், கத்தோலிக்கப் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணச் சைவத் தமிழ் அரசை வீழ்த்தினர் !

யாழ்ப்பான சைவத் தமிழரசன் சங்கிலியனின் நோக்கையும் போக்கையும் யாழ்ப்பாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சேர் பொன்னம்பலம் இராமநாதன் நோக்கையும் போக்கையும் ஒட்டி, இன்றைய சைவத் தமிழுலகம் தெற்குப் புத்தர்களோடு கை கோர்க்க விழைகிறது !

சங்கிலியனுக்கும் இராமநாதனுக்கும் நன்றியாகச் சைவ சமயத்திற்கும் அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது புத்தர்களின் தலையாய கடன் !

சைவர்களின் வாழ்விடங்களில் சைவர்களின் ஒப்புதலின்றிப் புத்தசமயக் கோயில்களை அமைப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு, இந்த இரு மாநாடுகளும் உதவ வேண்டும் !

வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர், வணக்கத்துக்குரிய விமல தேரர் இருவரையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு ஏனைய புத்தபிக்குகள் பணிபுரிய வேண்டும் !

நியூசிலாந்து மசூதியில் முகமதியர்களைச் சுட்டுக்கொன்ற கிறித்தவர், கொழும்பு கிறித்தவத் தேவாலயத்தில் வழிபாட்டாளர்களைக் கொன்ற முகமதியர் போன்ற தீவிரவாதிகள் புத்தரிடையே இருந்தால், அவர்களைத் திருத்திப் புத்தராக்க வேண்டிய தலையாய கடமை அன்பையும் அருளையும் இரக்கத்தையும் பேணுகின்ற நடுநிலைப் புத்தர்களுக்கு உண்டு !

இத்தகைய கண்ணோட்டம் உள்ள புத்த சமயத்தவரே சிங்கள மக்களிடம் பெரும்பான்மையாக உள்ளனர் !

சைவர்களுக்கு உரிய பராம்பரிய நிலங்களில் புத்தர் சமய மடங்களையோ சிலைகளையோ அமைப்பதனால், முகமதியர்களும் கிறித்தவர்களும் புத்த சமயத்தவருக்கு எதிராகச் சைவத் தமிழர்களை உசுப்பி விடுகிறார்கள் !

இலங்கை அல்லாவின் பூமி. இலங்கை இயேசுவின் பூமி. இவற்றை நோக்காகக் கொண்டு இலக்காக வைத்து மேற்கத்தைய மற்றும் வளைகுடா நாடுகளின் நிதிக் குவியலுடன் காய்களை நகர்த்திச் சைவர்களையும் புத்தர்களையும் பிரித்து வைக்கும் ஆபிரகாமிய சமய ஊடுருவலுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது !

ஆங்கிலேயரும் முகமதியரும் இணைந்து 1915இல் புத்தரை ஒடுக்கினர். புத்த சமயத் தலைவர்கள் உள்ளிட்ட 5000 புத்தர்களைத் தளையிட்டனர். அநாகரிக தர்மபாலரைச் சிறையில் அடைத்தனர் !

முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். யாழ்ப்பாணத்துச் சைவப் பெருமக்கள் தேர்ந்தெடுத்த சேர் பொன்னம்பலம் இராமநாதன், போர்க்காலச் சூழலிலிலும், இடர்களைத் தாண்டி இலண்டன் சென்றார் !

ஆங்கிலேயர் சிறையிட்ட 5000 புத்தர்களையும் விடுவித்தார் !

அன்றைய புத்தர்களின் தேசிய எழுச்சிக்குச் சைவப் பெருமக்கள் பெரிதும் உதவினர் !

சைவ சமயத்தையும் இலங்கைத்தீவின் முன்னுரிமைச் சமயமாக அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளும் நாள் இந்தத் தீவில் புத்தர் கூறிய அன்பும் அமைதியும் அறமும் ஓங்கும் நாள் ஆகும் !

அழைப்பிதழில் உள்ளதைப் போலவே புத்தர் கொடியும் நந்திக் கொடியும் சமநிலையில் பறக்கும் நாள் இலங்கைக்கு விடிவுநாள் !

மறவன்புலவு க. சச்சிதானந்தன்(சிவ சேனை / இலங்கை) அவர்களின், ஊடக அறிக்கை !

மக்களின் நண்பன்,
பராசுரன்(கனடா / ஈழம்)