ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், காங்., கட்சியின் தலைமை அலுவலகத்தில், வாஸ்து தோஷம் இருப்பதாக, நிபுணர்கள் கூறியதை அடுத்து, அங்கிருந்த மூன்று கழிப்பறைகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. ‘இதன் மூலம், விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என, அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 14 ஆண்டு களாக, இங்கு, பா.ஜ., தான் ஆட்சி நடத்துகிறது. அடுத்த சில மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான, பா.ஜ., எதிர்க்கட்சியான, காங்கிரஸ் ஆகியவை, தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

காங்கிரஸ் தலைவர்கள், வாஸ்து நிபுணர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர்.அப்போது, போபாலில் உள்ள கட்சியின் மாநில தலைமையக கட்டடத்தில், வாஸ்து தோஷம் இருப்பதாகவும், அதை சரி செய்தால், வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கலாம் என்றும், வாஸ்து நிபுணர்கள் ஆலோசனை கூறினர்.

இதையடுத்து, வாஸ்து நிபுணர்களின் யோசனையின்படி, தலைமையக கட்டடத்தின் கீழ்தளத்தில் உள்ள மூன்று கழிப்பறைகள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டடத்தின் முகப்பு தோற்றத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து, ம.பி., மாநில, காங்., செய்தி தொடர்பாளர், கே.கே.மிஸ்ரா கூறியதாவது:தலைமை அலுவலகத்தில் இருந்த வாஸ்து தோஷம், இப்போது சரி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ம.பி.,யில் நாங்கள் ஆட்சி அமைக்க இருந்த தடை நீங்கியுள்ளது. விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், நாங்கள் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.