மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

டில்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் ‘அச்சம் வேண்டாம்’ என பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலை தளத்தில் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நம் அண்டை நாடான சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் 67 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது. பூரண குணமடைந்த அவர்கள் கடந்த மாதம் வீடு திரும்பினர். இந்த நிலையில் டில்லி மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தலா ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து வந்த பயணியர் ஒருவர் வைரஸ் பாதிப்புடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மனைவிக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலை தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு முழு பரிசோதனை செய்வது முதல் பாதிப்பு உள்ளோருக்கு மருத்துவ உதவி அளிப்பது வரை என விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இந்த வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

6 பேருக்கு பாதிப்பா

டில்லி மயூர் விஹாரைச் சேர்ந்த 45 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மிகவும் வேகமாக பரவி வரும் ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு கடந்த மாதம் அவர் சென்றிருந்தார். அங்கிருந்து அவருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர். அவருடைய குடும்பத்தினரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு அவர் சமீபத்தில் சென்றிருந்தார்.

அதையடுத்து அவருடைய உறவினர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஆறு பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். வேறு யாருக்காவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

பள்ளிகள் மூடல்?

இந்த நபர் தனது மகனுடைய பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அதில் அவருடைய மகனின் பள்ளி நண்பர்களும் பங்கேற்றனர். அதையடுத்து டில்லியை அடுத்துள்ள நொய்டாவில் உள்ள அந்தப் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேறு மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதா என்று சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே நொய்டாவில் உள்ள மற்றொரு பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்துவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைத் தவிர பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான உஷார் நிலையில் உள்ளனர். இது தொடர்பாக மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கம்ப்யூட்டர் இன்ஜினியராக கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணியாற்றி வந்துள்ளது தெரியவந்தது.

அதையடுத்து இரு மாநிலங்களிலும் கண்காணிப்பு பணியில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகருக்கு அவர் சமீபத்தில் வேலை தொடர்பாக சென்றுள்ளார். அப்போது ஹாங்காங்கில் இருந்து வந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர்களிடம் இருந்து அவருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவர் பணியாற்றி வரும் பெங்களூர் நிறுவனம் ஐதராபாத்தில் அவருடன் பழகியுள்ளோர் என அவருடைய தொடர்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இத்தாலியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் வந்த இத்தாலியைச் சேர்ந்த 19 பேர் ஜெயப்பூரில் இருந்து ஆக்ரா வழியாக டில்லிக்கு சென்றுள்ளனர். ஆனால் அதன்பிறகு அவர்கள் எங்கே சென்றனர் என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் குறித்து தகவல் தெரிவிக்கும்படி ஓட்டல்கள் தங்கும் விடுதிகளுக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் இணைந்து, தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, சீனா, ஈரான், இத்தாலி, தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படி, மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், இந்த நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு முழு பரிசோதனை செய்யும்படி, அனைத்து விமான நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு, மார்ச், 3ம் தேதிக்கு முன் ஏற்கனவே வழங்கப்பட்டு, இதுவரை பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* உயர் நீதிமன்றம் கேள்விமேற்காசிய நாடான ஈரானில் தவிக்கும், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து, பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கின் விசாரணை, 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல முக்கிய மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. பாரசிட்டமால், வைட்டமின் மாத்திரைகள் தயாரிப்பதற்கான, 26 மூலப் பொருட்கள், இந்தத் தடையின் கீழ் வருகின்றன.இந்தியா, பெரும்பாலான மூலப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, சீனாவில் இருந்து. அதில் இருந்து மருந்து தயாரிக்கப் படுகின்றது. தற்போது சீனாவில் இந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மூலப் பொருட்கள் இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை, இந்த மாத இறுதியில், விசாகபட்டினத்தில் நடத்த திட்டமிட்டிருந்த, ‘மிலன்’ எனப்படும், 41 நாடுகள் பங்கேற்கவிருந்த, பிரம்மாண்ட போர் பயிற்சி ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

3 ஆயிரத்தை தாண்டியது பலி

கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளிலும் ஏற்படுத்தி உள்ள பாதிப்பு:
 உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, உலகெங்கும், 67 நாடுகளில், 3,056 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 89 ஆயிரத்து, 527 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

 அமெரிக்காவில், இதுவரை, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும், வாஷிங்டனைச் சேர்ந்தவர்கள். இதைத் தவிர, வெளிநாடு சென்று திரும்பிய, 48 பேர் உட்பட, 91 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க, அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகையில், சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, சீமா வர்மா இடம் பெற்றுள்ளார். மருத்துவ சேவை மையத்தின் தலைவராக அவர் உள்ளார்.
 சீனாவில் மட்டும், 2,943 பேர் உயிரிழந்துள்ளனர்; 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

’வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் மூலமாக, வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது’ என, சீன அரசு கூறியுள்ளது. சமீபத்தில், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பிய, 13 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 ஈரானில் நேற்று மட்டும், 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை, 77ஆக உயர்ந்துள்ளது. மொத்தம், 2,336 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 நம் அண்டை நாடான, பாகிஸ்தானில் ஏற்கனவே, ஐந்து பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரானில் இருந்து திரும்பிய, 45 வயது பெண்ணுக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

 வீடுகளில் இருந்தே பணியாற்றும்படி, தன் ஊழியர்களுக்கு, ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.