மோடியின் வருகைக்கு முன் குண்டுவெடிப்பு: இந்தியா உதவியுடன் நேபாளத்தில் அமைக்கப்பட்ட நீர்மின் நிலையத்தில் வெடித்தது

நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுவரும் நீர்மின் நிலையத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அடுத்த மாதம் இந்த நீர்மின் நிலையத்தின் ஒருபகுதியில் புதிய அடிக்கல் நாட்டுவிழா அமைக்க வருகை தர இருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

நேபாளத்தில் மின்தட்டுப்பாடு அதிகரித்துவருவதைத் தொடர்ந்து ‘சட்லஜ் ஜல் வித்யுத் நிகம்’ என்ற பெயரில் புதிய நீர் மின் நிலையம் அமைக்க கடந்த 2014, நவம்பர் 25-ம் தேதி பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் சுசில் கொய்ராலா ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த திட்டத்துக்கு இந்தியா சார்பில் 150கோடி டாலர் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதன்படி காத்மாண்டில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள டும்லிங்டர் பகுதியில் 900 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் நிதிஉதவியின் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மின்நிலையத்தின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று திடீரென இந்த சுற்றுச்சுவர் அருகே குண்டுவெடித்துள்ளது.

இது குறித்து சகுவாசசபா மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் சிவராஜ் ஜோஷி கூறியதாவது:

”நேபாளத்தின் கிழக்குப்பகுதியில், டும்லிங்டர் பகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய நீர்மின் நிலையத்தின் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் அருகே இன்று குண்டுவெடித்துள்ளது. இந்த மின்நிலையத்தின் மற்றொரு திட்டத்துக்கு பிரதமர் மோடி மே 11-ம் தேதி அடிக்கல் நாட்ட வரும் நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.”

நேபாளத்தில் கடந்த ஒரு மாதத்துக்குள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் நடக்கும் 2-வது குண்டுவெடிப்பு இதுவாகும். கடந்த 17-ம் தேதி பிரட்நகர் பகுதியில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே குக்கர் வெடிகுண்டு வெடித்தது. ஆனால், அந்த நேரத்தில் யாரும் இல்லை என்பதால், காயமின்றி தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.