மைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா?

இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் குரோதங்களம் தீவிரமாக வீக்கம் பெற்று எப்போது வெடிக்கும் என்ற நிலை தோன்றியுள்ளதை அரசாங்கம் மறைத்தும் மறுத்தும் செயற்பட்டாலும், இதே நேரத்தில் தலைவர்களை நம்பியிருந்த எமது தமிழ் மக்கள் செய்வது என்ன என்று தெரியாது திட்டாட்டமும் திகைப்பும் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். மாகாண மத்திய மற்றும் உள்;ராட்சி அரசுகளில் பலவிதமான அரசியல் பதவிகளை வகித்து வரும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தங்கள் சலுகைகளையும் சுகபோகங்களையும் அனுபவித்த வண்ணம் “வருவது வரட்டும். எமக்கொன்றும் ஆகாது தானே” என்ற இறுமாப்பில் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் நாளுக்கு ஒரு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் அவர்களது “பணிகள்” நகர்கின்றன. பௌத்த பிக்குகள் மட்டும் இனவாதத்தைக் கக்குவதாகத் தெரியவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூட இனவாதம் என்னும் விசத்தை தங்கள் நாக்குகளில் தடவியபடி திரிகின்றார்கள். அவர்கள் தங்கள் அமைச்சுகளில் பணிகளைச் செய்கின்றார்களோ என்னவோ நாம் அறியோம், ஆனால் தமிழ் மக்களுக்கு குறைந்த பட்ச அரசியல் சலுகைகளைக் கூட வழங்கக்; கூடாது என்பதற்கான எதிர்ப்பைக் காட்டுவதற்காகவே காத்திரு;க்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் எமது எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவது போல நடிக்கின்றார்கள். இது மக்களுக்கு வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்தியா கூட இலங்கையில் தமிழர் பிரச்சனையை இழுத்தடித்துச் செல்வதிலேயே கபடத்தனங்களை செய்து வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் ஆளும் கட்சியின் பிரதிநிதியாக வந்து சென்ற திருமதி தமிழிசை சௌந்தரராஜன், கூட ஒரு கபடம் நிறைந்த பயணமாகவே இங்கு வந்து சென்றுள்ளார். தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை திட்டித் தீர்ப்பதையும் அவர்களை நோக்கி வசை பாடுவதையும் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்புவதையும் சில மாதங்களுக்கு நிறுத்தி விடவேண்டும் என்ற நோக்கில் யாழ்ப்பாணம் வந்து”இந்தியா உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக உள்ளது. நான் இங்குள்ள நிiமைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துச் சொல்வேன்” என்று தமிழிசை சௌந்தரராஜன், தனது தாயகம் நோக்கி திரும்பியுள்ளார்.

இவ்வாறான நான்கு பக்கமும் கபடமும் சதிகளும் நிறைந்தவையாகவே காணப்படுகி;ன்றன. மைத்திரியின் ஆட்சியை தொடர்ந்து பேணுவதற்கும், இரா சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை தொடர்ந்து எதிர்க்கட்சி என்னும் தளத்தில் நிற்கவைக்கவும், இந்திய விஸ்த்தரிப்பையும் செல்வாக்கையும் தமிழர்கள் வாழும் வட பகுதியில் நிலைநிறுத்தவுமே இந்தியாவிலும் இலங்கையிலுமட் உள்ள ஆட்சியாளர்கள் தீர்மானம் எடுத்து விட்டார்கள். இவற்றை முறியடிக்க பலம் இல்லாத மக்கள் என்ன செய்வார்கள். பாவம், பாதிக்கப்பட்ட மக்கள் மாதக்கணக்கில் வீதிகளில் நின்று வெய்யிலிலும் மழையிலும் வேதனையை அனுபவிக்கின்றார்கள். ஆனால் அவர்களால் அரசியல் பதவிகளைப் பெற்றவர்கள் உல்லாச வாகனங்களில் உலா வருகின்றார்கள். கொழும்பில் மைத்திரியின் அரசு மதி மயங்கி நின்று ஆட்சியைத் தக்க வைக்க போராடுகின்றது. பௌத்த பிக்குகளின் விசமத்தனமான கோரிக்கைகளை நிராகரிக்க துணிவில்லாமல் ஜனாதிபதியுடன் சேர்ந்து ரணிலும் திண்டாடுகின்றார்கள்.