மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மெரினா கடற்கரையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த முயன்றதாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி (42), தமிழர் விடியல் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டைசன் (27), மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் (32), உறுப்பினர் அருண்குமார் (27) உட்பட 17 பேரை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஒரு வாரத்துக்கு முன்பு 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டத்துக்கு ஆதரவு

இந்நிலையில், ஐ.நா.வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மிரட்டிய இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அங்கு வந்த திருமுருகன் காந்தி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். அப்போது டீக்கடையில் இருந்த திருமுருகன் காந்தியையும் கைது செய்ய முயன்றுள்ளனர். அவரோ, ‘‘நான் போராட்டத்தில் கலந்துகொள்ள வரவில்லை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே வந்தேன்’’ என தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ளாத போலீஸார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.