மே.வங்கத்தில் பா.ஜ., யாத்திரைக்கு ஐகோர்ட் அனுமதி

லோக்சபா தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 3 இடங்களில் யாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டது. இதை கட்சி தலைவர் அமித் ஷா துவக்கி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், யாத்திரைக்கு அனுமதி வழங்க மாநில அரசு அனுமதி மறுத்து விட்டது. இதை எதிர்த்து பா.ஜ., சார்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், யாத்திரைக்கு அனுமதி வழங்கியதுடன், பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். பொது மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படுத்தக்கூடாது. அமைதியாக யாத்திரை நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாததை அரசு உறுதி செய்வதுடன், போலீசார் 12 மணி நேரத்திற்கு முன்பே ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

இது தொடர்பாக மாநில பா.ஜ., துணைத்தலைவர் ஜாய் பிரகாஷ் கூறியதாவது: இந்த உத்தரவு ஜனநாயகத்திற்கும், மே.வங்க மக்களுக்கும் கிடைத்த வெற்றி. ஜனநாயகத்தை தோற்கடித்தவர்களுக்கு கிடைத்த தோல்வி. எந்த காரணமும் இல்லாமல் பா.ஜ., யாத்திரை சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என மாநில அரசு கூறியது. ஆனால், இதனை நிராகரித்த ஐகோர்ட், பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. அமைதியாக நடத்தவும், கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் எனக்கூறியுள்ளது. யாத்திரை நுழையும் மாவட்ட நிர்வாகத்திடம் 12 மணி நேரத்திற்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.