மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸ் விசாரணை

ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இஸ்ரேல் நாட்டில் 4-வது முறையாக பிரதமர் பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இந்த நிலையில் அவர் மீது ஏற்கெனவே 2 ஊழல் வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து 3-வது வழக்காக இவர் மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக பெசக் இஸ்ரேலி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தனக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக பெஞ்ச மின் நெதன்யாகு மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இதனால் டெலிகாம் துறை விதிகளில் பெஞ்சமின் நெதன்யாகு மாற்றம் மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பெசக் நிறுவனத்துக்கு லட்சக்கணக்கான அமெரிக்க டாலர்கள் லாபம் கிடைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் போலீஸார் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் விசாரணையை நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நெதன்யாகுவின் மனைவி சாரா, மகன் யாயிர் ஆகியோரிடமும் போலீஸார் தனியாக விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேல் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. மேலும் பெசக் இஸ்ரேலி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான ஷால் எலோவிட்சிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஊழல் வழக்குகளில் இதுவரை 9 முறை பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் விசாரணையின்போது தான் ஒரு அப்பாவி என்றும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 12 வருடங்களாக இஸ்ரேலின் பிரதமர் பதவியில் நீடித்து வருகிறார் பெஞ்சமின் நெதன்யாகு.