மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு; அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம்

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளரான ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இரட்டை இலை சின்னம் மூலம் வெற்றி பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் (கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு) திடீரென மு.க ஸ்டாலினை சந்திக்கிறார்கள். டி.டி.வி. தினகரனை பார்க்கிறார்கள். சிறையில் சசிகலாவை சந்திக்கிறார்கள். சந்து முனையில் சிந்து பாடுகிறார்கள். மு.க.ஸ்டாலினை இந்த எம்.எல்.ஏ.கள் சந்தித்து, வைத்த கோரிக்கை ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமாகும்.
2009–ம் ஆண்டு ஈழத்திலே லட்சக்கணக்கான தமிழர்கள் ராட்சத குண்டுகள் மூலம் கொல்லப்படுவதற்கு துணை போன காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்? தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்த போது தான் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்த போது, அவரை வந்த விமானத்திலேயே திருப்பி விரட்டி அனுப்பிய கூட்டம் தான் தி.மு.க. என்பதை ஸ்டாலினை சந்தித்த மூன்று எம்.எல்.ஏ.கள் மறந்து விட்டார்களா?.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுத்தும் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தி.மு.க., நளினி விடுதலை பற்றி சிந்தித்தது உண்டா?பேரறிவாளன் பரோல் பற்றி நினைத்து பார்த்தது உண்டா?. துணை முதல்–அமைச்சராக இருந்த மு.க ஸ்டாலின் துடி துடித்தது உண்டா?.
ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க எம்.ஜி.ஆர் பல கோடிகளை அள்ளி கொடுத்தார். ஜெயலலிதா சட்டசபையை கூட்டி பல்வேறு சிறப்பு தீர்மானங்களை நிறைவேற்றினார். இலங்கை மீது பொருளாதார தடை போன்ற தீர்மானங்களை ஜெயலலிதா முன்மொழிந்தார். மேலும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலர செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றினார்.
தமிழக அரசு பேரறிவாளனை பரோலில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தலைமையிலான அ.தி.மு.க. ஜெ.தீபா அணி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலை உயர்த்தி பிடிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.