முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை பாரிய அளவில் குறையும் !!

இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.

இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 சதவீதத்தினை, கட்சி அல்லது சுயேட்சை குழுவொன்று பெறவேண்டும் எனும் தற்போதைய சட்டத்தை, 12.5 சதவீதம் பெற வேண்டும் என மாற்றுவதற்காகவே 21ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

இந்த நிலையில் மேற்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், சிறுகட்சிகளும், சிறுபான்மை சமூகங்களும் நாடளுமன்ற உறுப்பினர்களை பெறுவதில் பாரிய தடை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.

குறிப்பாக இந்த திருத்தத்தினால் தமிழர் மற்றும் முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை பாரிய அளவில் குறையும் என்றும், அவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனேயே இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதாகவும் சிறுபான்மை சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் தேர்தலின்போது மாவட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரைப் பெறுவதற்கான வெட்டுப் புள்ளி 12.5 சதவீதமாகவே இருத்தல் வேண்டும் என்று, 1978ம் ஆண்டின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் 99ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 99(5)(அ) உறுப்புரை பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது: “ஏதேனும் தேர்தல் மாவட்டத்தில் நடைபெறும் ஏதேனும் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் எட்டிலொன்றுக்குக் குறைவான வாக்குகளைப் பெறும் ஒவ்வோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியும், சுயேட்சைக் குழுவும் அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கு அதனது வேட்பாளர் எவரையும் தேர்ந்தனுப்பத் தகைமையிழத்தல் வேண்டும்”.

அதாவது அந்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 12.5 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் தரப்பினரே, உறுப்பினர்களைப் பெறுவதற்கான தகைமையைப் பெறுவர் என்று, அரசியலமைப்பின் மேற்படி உறுப்புரை கூறுகின்றது.

ஆனால் 1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 15வது திருத்தத்தின் மூலமாக, தேர்தல் மாவட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான மேற்படி வெட்டுப் புள்ளி 12.5 எனும் வீதத்திலிருந்து 5 வீதமாகக் குறைக்கப்பட்டது.

1988ம் அண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போதைய பிரதம மந்திரி ரணசிங்க பிரேமதாஸவின் முயற்சியினால் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு ரணசிங்க பிரேமதாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இடம் கேட்டபோது, அதற்குப் பகரமாக சில கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என, அஷ்ரப் கூறினார்.

அதில் ஒன்றுதான்; தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில் உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளியை 5 வீதமாகக் குறைக்க வேண்டும் என்பதாகும்.

அந்தக் கோரிக்கையை ரணசிங்க பிரேமதாஸ நிறைவேற்றிக் கொடுத்ததை அடுத்து, 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், அவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியிலேயே, தற்போது – நாடாளுமன்ற உறுப்பினரொருவரைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளியை மீண்டும் 12.5 வீதமாக அதிகரிப்பதற்கான தனிநபர் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.