முழு அடைப்புக்கு ஆதரவாக சென்னையில் மறியல்: அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் பேர் கைது

முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திரு நாவுக்கரசர், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

பயிர்க் கடன் தள்ளுபடி உட்பட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால் சென்னையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக் கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்து கள் வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையில் இயங்கின. ஆட் டோக்கள் மிகவும் குறைவாகவே ஓடின.

முழு அடைப்புப் போராட்டத் துக்கு ஆதரவாக சென்னையில் பல்வேறு இடங்களில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மமக ஆகிய கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்க பாலு, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணி யன், கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நேற்று காலை சைதாப்பேட்டை பஜார் தெருவில் இருந்து பேரணியாக வந்து பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது பேசிய ஜி.ராமகிருஷ் ணன், ‘‘பெரு நிறுவனங்களின் பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, வறட்சியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய மறுக் கிறது. டெல்லியில் 40 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடினர். அவர்களை அழைத்து பேசக்கூட பிரதமருக்கு மனம் இல்லை. வறட்சி யில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம் நடக்கிறது’’ என்றார்.

திருமாவளவன் பேசும்போது, ‘‘வறட்சியின் காரணமாக பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற் கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டேன் என மத்திய அரசு அடம் பிடிக்கிறது. மத்திய அரசுக்கு தமிழகத்தின் ஒற்றுமையை எடுத்துக்காட்டவே இந்தப் போராட்டம்’’ என்றார்.

இரா.முத்தரசன் பேசும்போது, ‘‘விவசாயிகளுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்திய முழு அடைப்பு போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் இயங்க வில்லை. தமிழகத்தின் பாதிப்பை உணர்ந்து விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

பின்னர், அவர்கள் அனைவரும் பனகல் மாளிகை அருகே அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

எழும்பூர் உடுப்பி ஹோட்டல் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

அய்யாகண்ணு நன்றி

முன்னதாக திருநாவுக்கரசர் பேசும்போது, ‘‘தமிழகத்தையும், விவசாயிகளையும் மத்திய அரசுதான் புறக்கணிக்கிறது. அதைக் கண்டித்துதான் போராட்டம் நடக்கிறது. அதனால் அரசே பேருந்துகளை இயக்காமல் நிறுத்தியிருக்கலாம். அதைவிடுத்து ஒவ்வொரு அமைச்சராக அது இயங்கும், இது செயல்படும் என்று பேட்டி கொடுப்பது மக்களுக்கு எதிரான நிலைப்பாடு’’ என்றார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு பேசும்போது, ‘‘எங்கள் கோரிக்கைகள் நிறைவேற முயற்சி மேற்கொள்வதாக முதல்வர் உறுதி அளித்ததால் போராட் டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத் துள்ளோம். எங்கள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்த அனை வருக்கும் நன்றி’’ என்றார்.

அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராஜன் உள்ளிட்ட நூற் றுக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் சாலை மறியலில் ஈடு பட்ட திமுக, காங்கிரஸ், இடதுசாரி கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி களைச் சேர்ந்த 8,300 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப் பட்டனர்.

தாம்பரம், குன்றத்தூர்

தாம்பரத்தில் எஸ்.ஆர். ராஜா எம்எல்ஏ தலைமையில் 300 பேரும், குன்றத்தூரில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 300 பேரும் குரோம்பேட்டையில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில் 150 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல, பீர்க் கன்காரணை, பெருங்களத்தூர், ஆலந்தூர், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை, அஸ்தினாபுரம் உள்ளிட்ட சென்னை புறநகரின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.