முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது

முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறுகிய காலத்துக்குள் சிங்களமயமாகும் அபாயம் நிலவுவதாக வட மாகாண சபையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து முல்லைத்தீவில் சிங்களவர்களுக்கு மிகப்பெரிய நீர்ப் பாசனத்திட்டம் ஒன்றினை மத்திய அரசு கொண்டு வரும் இரகசிய நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதனை வடக்கு மாகாணசபை அம்பலப்படுத்தியுள்ளது.
மகாவலி எல் ஜடுஸ வலயத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி கிவுல் ஓயா எனும் பெயரில் சிங்களவர்களுக்கு என மிகப்பெரும் நீர்ப்பாசன திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருவதனை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் அம்பலப்படுத்தியுள்ளார். குறித்த திட்டம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளிலேயே உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு கடந்த புதன்கிழமையன்று நடைபெற்றது. இதன் போது குறித்த திட்டம் தமிழ் மக்களுக்கு வழங்கப் பட வேண்டும் என பிரேரணை ஒன்றை கொண்டு வந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் வாழ் நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் குளங்கள் என்பன அபகரிக்கப்பட்டே இந்த நீர்ப்பாசன திட்டம் மேற் கொள்ளப்படவுள்ளது. இத்திட்டம் மிகவும் ஆபத்தானதாகும் என்றும் குறிப்பிட்டார்.மேலும், இத்திட்டத்தை நடைமுறைப்படு த்துவது மாத்திரமின்றி மேலும் ஒரு தொகுதி பெரும்பான்மை மக்களை முல்லைத்தீவில் குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடு த்து வருகிறது எனத் தெரிவித்தார்.