முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை

தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.
செப்டம்பர் மாதம் 22-ந் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதிலும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அ.தி.மு.க. தலைவர்கள் சிலரும் இந்த சந்தேகத்தை எழுப்பினார்கள்.

இதையடுத்து ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள மர்மங்களை கண்டுபிடிக்க உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டு விசாரணை ஆணையத்தை அமைத்தார்.

சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை தலைவராகக் கொண்டு அந்த விசாரணை ஆணையம் செயல்படும் என்று கடந்த மாதம் 25-ந்தேதி தமிழக அரசு அறிவித்தது. அவர் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்த அலுவலகத்துக்கு வந்த நீதிபதி ஆறுமுகசாமி பணிகளைத் தொடங்கினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் நவம்பர் 22-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் வீட்டில் இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை தொடங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் கோவையில் நீதிபதி ஆறுமுகச்சாமி உள்ளதால் விசாரணை புதன்கிழமை அன்று தொடங்கும் என்று கூறபட்டு உள்ளது. அவர் சென்னைக்கு புதன் கிழமை வருகிறார். மேலும் விசாரணை ஆணையத்திற்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 20 பேர் கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகச்சாமி இந்த நோட்டீசை அனுப்பி உள்ளார். இவர்களிடம் முதலில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.