முதல்வர், அமைச்சர்களுடன் தம்பிதுரை தீவிர ஆலோசனை: அதிமுக அணிகள் இணைவதாக தகவல்

அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக தீவிர முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றும் முயற்சி யில் ஓபிஎஸ் சசிகலா ஆகிய இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணை யத்தின் முடிவையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, சுகாதார அமைச்சர் சி.விஜய பாஸ்கர் வீட்டில் ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

வருமான வரி சோதனை முடிந்ததுமே, அமைச்சரவையில் இருந்து விஜய பாஸ்கரை நீக்க வேண்டும் என டிடிவி தினகரனிடம் சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்த தினகரன், ‘‘அவர் படித்தவர். இதுதொடர்பாக அவரே முடிவெடுப்பார்’’ என்று தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழலில், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எந்த நேரத்திலும், தினகரன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படும் நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திப்பதற்காக தினகரன் நேற்று காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித் தார். தொகுதி சம்பந்தமாக அவர் கோரிக்கை அளித்ததாக கூறப்பட்டது. ஆனால், முதல்வர் பழனிசாமி, அமைச் சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோருடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவர் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தம்பிதுரை கூறியபோது, ‘‘அதிமுகவில் பிளவு ஏதும் இல்லை. இந்த அரசும் நிலையாக உள்ளது. எந்த தேர்தல் நடந்தாலும் கட்டாயம் வெற்றி பெறுவோம். நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்’’ என்றார்.

அதே நேரம், சென்னை விமான நிலையம் சென்ற ஓ.பன்னீர்செல்வம் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக இதுவரை யாரும் என்னை அணுக வில்லை. ஆனால், நிச்சயம் வருவார்கள் என்று நம்புகிறேன். வந்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் பேசத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்

நேற்று காலை முதல் தலைமைச் செயலகத்திலேயே இருந்த முதல்வர் பழனிசாமி, அவ்வப்போது அமைச்சர்க ளுடன் ஆலோசனை நடத்தியபடி இருந்தார். மாலையில் தம்பிதுரை மீண்டும் தலைமைச் செயலகம் வந்தார். முதல்வர், அமைச்சர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது:

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு சகஜம். ஆனால், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை. இங்கு அணிகள் என்பதே இல்லை. அணிகள் இருப்பதாக தேர்தல் ஆணையமும் கூறவில்லை. எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசிக் காலத்தில் உடல் வருந்திய நிலையிலும், மக்களை சந்தித்து இந்த ஆட்சியைத் தந்துள்ளார். அதை தக்கவைப்பது மிகவும் முக்கியம். கருத்து வேறுபாடு களைந்து நாம் ஒன்றுபட வேண்டும் என்பதே என் வேண்டுகோள். கருத்து வேறுபாடு உள்ளவர்கள் சொல்லட்டும். நாங்கள் பேசத் தயார். இரட்டை இலையை மீண்டும் பெற ஒற்று மையுடன் செயல்படுவோம். கட்சியில் மூத்த அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சேர்ந்து பேசுவார்கள். ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சி தொடர அனைவரும் ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெ. நினைவிடத்தில் பரபரப்பு

இதற்கிடையில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடப் பகுதியில் திடீரென அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அரசு அதிகாரிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். முதல்வர், அமைச்சர்கள் அங்கு வரப்போவதாக தகவல் வெளியானது. மதுரையில் இருந்து சென்னை திரும்பும் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரப் போவதாகவும் கூறப்பட்டது. இரு தரப்பினரும் அங்கேயே பேச்சு நடத்தி இணையப்போவதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், யாரும் வரவில்லை. இரவு 7.30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர், அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர். இரு தரப்பினரும் வெகுவிரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, தினகரனை தவிர்த்துவிட்டு ஒருசில நாட்களில் இணைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிமுக (அம்மா) அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்எல்ஏக்களுக்கு அழைப்பு

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக முழுவீச்சில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று சென்னைக்கு வருமாறு தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ‘ஐஎன்எஸ் சென்னை’ கடற்படை போர்க் கப்பலைப் பார்வையிடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.