முதலமைச்சர் பழனிசாமியுடன், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு

தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கியுள்ளது.
இதேபோல், திண்டுக்கலில் 31.12.2017 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்து வரும் சிறை கைதிகளை சட்டத்துக்குட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்குட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்காகவும், தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கியதற்காகவும், முத்தலாக் தடை மசோதாவில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்காகவும் எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய முகாம் இல்லத்தில் சந்தித்து தங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டனர். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.