முடிவுகளை எட்டாத சந்திப்புக்ளை நடத்தும் தலைவர்களால் மக்களுக்கு பலனில்லை

பேயுலாவும் மண்ணில் பொழுதெப்போவிடியும் என்ற தலைப்பில் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதே கதிரோட்டப் பக்கத்தில் வாராந்த ஆசிரிய தலையங்கத்தை நாம் வடித்தது இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். அவர்களின் இருப்பை உறுதி செய்யும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படையுங்கள் என்று விடுதலைப் புலிகளின் தலைமை சமாதானத் தூதுவர்கள் மூலம் அப்போது ஆட்சியில் அமர்ந்திருந்த சிங்கள ஆட்சியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். “நீங்கள் சமாதானத்திற்கு வராவிட்டால் நாங்கள் யுத்தம் செய்து உங்களை அழித்து விடுவோம்” என்றுகர்ச்சித்தது சிங்கள ஆட்சி மன்றம். ஆமாம்! அப்போதும் அவர்கள் யுத்த வெறியர்களாகவே இருந்தார்கள். தங்கள் சொந்த மக்கள் தங்கள் நிலங்களில் சுய உரிமை பெற்றவர்களாக வாழ வழி செய்வோம் என்று அவர்கள் எண்ணவே இல்லை.

இவ்வாறான ஒரு கொடூரமான அரசியல் தலைமைத்துவமே இன்னும் தென்னிலங்கையில் கோலோச்சுகின்றது என்றே நாம் கூற வேண்டியவர்களாக உள்ளோம். மகிந்த இராஜபக்சா என்ற கொடிய ஆட்சித் தலைவன் விலகிச் செல்ல“ சந்திரன் வருகின்றான்” என்ற ஆரவாரத்தோடு மைத்திரி பாலசிறிசேனாவை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் மக்கள். அவர்களில் தமிழ்த் தலைவர்கள் ஆராத்தி எடுக்க மைத்திரி புன்னகைபூத்த முகத்தோடு வந்து ஆட்சியில் அமர்ந்தார். மைத்திரி ஆட்சி மலர்ந்து எத்தனையோ ஆண்டுகள் நகர்ந்து சென்றுள்ளன.

தமிழ் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே போகி;ன்றன. சிறைகளில் வாடும் அப்பாவி அரசியல் கைதிகள், காணமற் போனவர்கள் என்ற நாமத்தோடு எங்கேயோ மறைந்திருக்கும் உறவுகள். அவர்களின் வரவுக்காக ஆண்டுகள் பலவாய் காத்திருக்கும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பறிபோன காணிகளில் பூத்திருக்கும் படையினர் முகாம்களை பார்த்து பார்த்து கண்கள் பூத்துப் போன மக்கள், வேலையில்லாமல் வாடும் பட்டதாரிகள்… இவ்வாறான தமிழ் மக்களின் பிரச்சனை என்பதை பூதாகரமாக வளர்ந்து கொண்டே போகின்றன.

பிரச்சனைகள் விரைவில் தீரும் என்று அடிக்கடி வாய்மொழி பகரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்களும் அவரதுஅரசியல் சகாக்கள் சிலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தங்கள் அரசியல் பயணத்தை தொடர்கின்றார்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரி உடனான பேச்சுவார்த்தைகள் கூட எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிறைவுற்றாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில், சுமந்திரன் எம்பி யோசில நல்ல விடயங்கள் விரைவில் இடம்பெறும் என்று பொதுமக்களுக்கு “இல்லாதவற்றை” கூறி நிற்கின்றார். மைத்திரி பால சிறிசேனா தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு மக்கள் பிரச்சனை தொடர்பாக பேசியபோது அரசாங்கத்தின் பக்கத்தில் அவர் மட்டுமே இருந்திருக்கின்றார். மறு பக்கத்தில் சம்பந்தன் ஐயாவோடு சுமந்திரன் எம்பி மட்டுமே சென்றுள்ளார். இந்த சந்திப்பில் எவ்வாறு உறுதியான முடிவுகளை எடுக்க முடியும். நாம் கூறியவாறு இவர்களின் சந்திப்பு முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமலே முடிக்கப்பட்டுள்ளது.

காலத்தைக் கடத்தும் அரசியல் தலைவர்களின் போக்குகள் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது, அவர்களது வருமானம், சுகபோகம் அனைத்தும் அவர்கள் மடிகளில் வந்து விழும். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களது மடிகளில் எப்போதும் வேதனையும் அழுகையும் தான்??