முக்கிய நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துகளால் அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு

அதிமுகவின் இரு அணி நிர்வாகிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

கட்சி, சின்னத்தை மீட்ப தற்காக அதிமுகவின் இரு அணி களையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இரு அணியி லும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்காவிட்டால் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை கிடையாது’ என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உறுதியாக தெரிவித்து வரு கின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி நிர்வாகிகள் கூட்டம், எம்எல்ஏ செம்மலை தலைமையில் நடந்தது. அதில், ஓபிஎஸ் அணி தனித்து செயல்பட வேண்டும் என்று முடிவெடுக் கப்பட்டது. பின்னர் செம்மலை கூறும்போது, ‘‘எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணை வதற்கு பெரும்பாலான தொண் டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். அவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து, ஓபிஎஸ் தலைமையிலான முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், ‘‘செம்மலையின் கருத்து தனிப்பட்டதா அல்லது ஓபிஎஸ் அணியின் கருத்தா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண் டும். ஏற்கெனவே நானும் என்னுடைய குழுவைச் சார்ந்த வர்களும், ‘காலம் கனிந்து விட்டது, பேச வரவேண்டும்’ என்று கூறிவருகிறோம். பேச்சு வார்த்தைக்கு வர மறுப்ப தற்கான காரணத்தை அவர்க ளிடம்தான் கேட்க வேண்டும்’’ என்றார்.

அதிமுக தலைமை அலு வலகத்தில் 3 நாட்களாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்கும் பிரமாணப் பத்திரத்தில் கையெ ழுத்து பெற்றதாக தகவல் வெளி யானது. இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த எம்பி மைத்ரேயன், ‘‘அதிமுக அம்மா அணியினர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைப்ப தாக கூறிவிட்டு, அவர்களுக்கு ஆதரவாக பிரமாணப் பத்திரத் தில் கையெழுத்து வாங்குவதன் மூலம் அவர்களின் செயல் ஒரு நாடகம் என்று தெரிகிறது’’ என்றார்.

இவ்வாறு இரு அணிகளி லும் நிர்வாகிகள் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருவதால் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்கு வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையே, சென்னை வீனஸ் காலனியில் உள்ள தனது இல்லத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஆலோ சனை நடத்தினார். இதில் க.பாண்டியராஜன், பொன்னை யன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை மற்றும் மதுசூதனன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித் தும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆலோசனை கூட்டத் துக்குப் பிறகு நிருபர்களிடம் பொன்னையன் கூறும்போது, ‘‘இரு அணிகள் பேச்சுவார்த்தை என்பது வேறு, பிரமாண வாக்குமூலம் தருவது என்பது வேறு. தேர்தல் ஆணையத்தில் கடந்த 2 மாதமாக அந்தப் பணி நடந்து வருகிறது. அதையும், இதையும் இணைத்துப் பேச வேண்டாம்’’ என்றார்.