முக்கிய ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் பிடித்து உதைத்த சிஆர்பிஎப்

சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் விஜயகுமாருக்கு சொந்தமான கல்குவாரி புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசல் கிராமத்தில் கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் குவாரி உள்ளது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் என 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் நைனார் வீடு  திருவல்லிக்கேணியில் உள்ளது. அங்கு நடந்த சோதனையில் 2.2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

விஜயபாஸ்கர் வீட்டின் நுழைவு வாயிலில் வாக்குவாதம்; வீட்டிற்குள் அனுமதிக்ககோரி சிஆர்பிஎப் வீரர்களுடன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து
புதுக்கோட்டையை சேர்ந்த பிரமுகர் ஒருவர் விசாரணைக்காக வருமானவரித்துறை அலுவலகத்திற்கு சிஆர்பிஎப் வீரர்கள் இருவரால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

எம்.எல்.ஏக்கள் விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறையில் ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யபட்டது.

சோதனை நடந்துகொண்டிருந்தபோது, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியே வந்து, ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மத்திய தொழில்பாதுகாப்புப் படையினர், அவரை பேசவிடாமல் தடுத்தனர். இதனால், அவருடன் விஜயபாஸ்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.

அதனை பார்த்த  சிஆர்பிஎப் படையினர் துரத்தினர். கையில் வைத்திருந்த ஆவணத்தை டிரைவர் மதில் சுவர் வெளியே அவர் வீசிவிட்டார். அப்போது, வெளியில் இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர் அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். அவரை சிஆர்பிஎப் படையினரால் பிடிக்கமுடியவில்லை.

இந்நிலையில், ஆவணத்தை வெளியே வீசிய விஜயபாஸ்கரின் கார் டிரைவரை சிஆர்பிஎப் படையினர் தடியால் சரமாரியாக அடித்தனர். இதன்பின்னர் அவரை அழைத்துச்சென்று ஒரு அறையில் தங்கவைத்தனர். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, விஜயபாஸ்கரின் கார் டிரைவரை தாக்கிய சிஆர்பிஎப் படையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அபிராமபுரம் காவல்நிலையத்தில் அமைச்சரின் ஆதரவாளர் முரளி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.