முகமது ஷமி மனைவியின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்தார்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹனின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார், அவரும், அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர், கொலை செய்யக்கூட முயற்சிக்கிறார்கள் என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். இதையடுத்து ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் முகமது ‌ஷமி, மனைவிக்கு சமாதான தூது அனுப்பினார். அவர் கூறுகையில், ‘எனது மனைவியுடன் நான் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். மனைவி, மகளுடன் என்னால் சேர்ந்து வாழ முடியும். நான் ஒரு அப்பாவி, எனக்கு எதிராக சதி நடக்கிறது. எனது மனைவியை யாரோ ஒருவர் தவறாக வழிநடத்துகிறார். இந்த சர்ச்சையால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் அது பயிற்சியையும் பாதித்துள்ளது’ என்றார்.
ஆனால் முகமது ‌ஷமியின் சமரசத்தை ஏற்க மறுத்துள்ள ஹசின் ஜஹன், ‘கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு ஏற்ற மாதிரி என்னை மாற்றிக்கொண்டேன். ஆனால் அவரோ தொடர்ந்து தவறுகள் செய்தாரே தவிர திருந்தவில்லை. இந்த பிரச்சினையில் இப்போது போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். எனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நான் செயல்படுகிறேன். மற்ற பெண்களுடன் ‌ஷமிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ள செல்போன் என்னிடம் இருக்கிறது. அந்த செல்போன் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால் இந்த நேரம் அவர் என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கியிருப்பார்’ என்றார். இப்பிரச்சனையில் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹனின் முன்னாள் கணவர் மவுனம் கலைத்து உள்ளார்.
முகமது ‌ஷமி மற்றும் ஹசின் ஜஹன் இணைந்து வாழ வேண்டும் என கூறிஉள்ளார் அவருடைய முன்னாள் கணவர் சைஃபுதீன் கூறிஉள்ளார்.
சைஃபுதீன் பேசுகையில், முகமது ‌ஷமி மற்றும் ஹசின் ஜஹன் இணைந்து வாழ்வார்கள், அவர்கள் இடையிலான பிரச்சனையை தீர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்,” என்றார். ஹசின் ஜஹன் உடனான தன்னுடைய திருமணம் தொடர்பாக சைஃபுதீன் பேசுகையில், எங்கள் இருவருக்கும் 2002ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும்மில் ஒன்றாக வாழ்ந்தோம். வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டாலும் நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம். 2000த்தில் சந்தித்து, இருவருடங்கள் கழித்து திருமணம் செய்துக்கொண்டோம். எங்களுக்கு இரண்டு பெண்கள் குழந்தைகள் பிறந்தது. அதன்பின்னர் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
ஹசின் ஜஹன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார். எங்கள் குடும்பம் நடுத்தரக் குடும்பம் என்பதால் படிப்புக்கு செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது விவகாரத்திற்கு வழிவகை செய்தது. 2010-ம் ஆண்டு நாங்கள் விவகாரத்து செய்துக்கொண்டோம். குழந்தைகளை அவரிடம் விட்டுவிட வேண்டும் என கோர்ட்டு கூறியது. ஹசின் ஜஹனுக்கு முகமது ஷமியுடன் திருமணம் ஆனதும் என்னுடைய குழந்தைகள் என்னிடம் திரும்பிவிட்டன,” என்றார். ஹசின் ஜஹன் மூத்த பெண் பேசுகையில் எங்களுடைய தாய் பிரிந்து இருப்பது வேதனையாக உள்ளது, விடுமுறை நாட்களில் மட்டும் எங்களை சந்திப்பார் என கூறிஉள்ளார்.