மீனவர்களை தாக்கியது கடலோர காவல் படை துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல: நிர்மலா சீதாராமன் பேட்டி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய கடலோர காவல்படையே ஒப்புக்கொண்ட நிலையில் “துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டது கடலோர காவற்படை பயன்பாட்டில் உள்ள தோட்டாக்கள் அல்ல” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பற்றி?

“கோஸ்ட் கார்ட் தலைவரைக் கேட்டேன், எங்களிடம் அப்படிப்பட்ட தோட்டாவே இல்லை. பிறகு எப்படி நாங்கள் மீனவர்கள் மீது பிரயோகித்திருக்க முடியும் என்று கேட்கிறார். அப்படிப்பட்ட தோட்டாக்களை நீங்கள் சப்ளை செய்கிறீர்களா? என்று பாதுகாப்புத்துறையை பார்த்து அவர் கேட்டார்.

ஆகவே, இதில் நான் இவர்களை நம்புகிறேன் அவர்களை நம்புகிறேன் எனும் விஷயத்திற்குள் போக விரும்பவில்லை. மீனவர்கள் படும் கஷ்டம் எனக்குப் புரிகிறது. அதனால் இந்தத் தோட்டாக்களை யார் பயன்படுத்தினார்கள் என நான் விசாரிக்கிறேன். நீங்கள் தான் செய்தீர்கள் என்று யாரும் சொல்லாதீர்கள். இது போன்ற தோட்டாவே எங்களிடம் இல்லை. கோஸ்ட் கார்டில் சப்ளை செய்வதும் இல்லை. அநதத் தோட்டா எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது.

அதனால் மீனவர்கள் சொல்வது தப்பா, தப்பில்லை அவர்கள் சொல்வதும் நிஜம், ஆனால் தீர விசாரித்து பேசுவது நம்ம எல்லோருக்கும் நல்லது” என்று தெரிவித்தார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதலை இந்தியக் கடலோரக் காவல்படையே ஒப்புக்கொண்ட நிலையில், “துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டது கடலோரக் காவற்படைப் பயன்பாட்டில் உள்ள தோட்டாக்கள் அல்ல” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.