மீண்டும் தெர்மாகோல் திட்டம்: கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகப்படுத்தினார்

வைகை அணை தெர்மாகோல் திட்டத்தைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறி சந்தையில் தெர்மாகோல் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகப்படுத்தினார்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் பார்வையிட்டார்.
அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் மின்சார செலவைக் குறைக்க, தெர்மாகோல் பொருத்தப்பட்ட தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு உதவும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடையாது. சிறு, குறு விவசாயிகள் மட்டுமே கடன் தள்ளுபடிப் பயனைப் பெறுவார்கள்” என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
முன்னதாக, தேனி மாவட்டத்தில் இருக்கும் வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தெர்மாகோல் அட்டைகளைப் போர்த்தினர். சுமார் 300 தெர்மாகோல் அட்டைகளை ‘டேப்’களை வைத்து ஒட்டி அணையில் மிதக்கவிட்டனர்.

‘அணை முழுவதும் தெர்மாகோல் அட்டைகளைப் போட்டு தண்ணீரை மூடுவதாவது’ என்று நிபுணர்கள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை ஆரம்பத்தி லேயே இத்திட்டத்தை விமர்சித்தனர். அதற்கேற்றவாறு, அடுத்த சில நிமிடங்களிலேயே தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் காற்றில் பறந்துபோய்விட்டன.
இந்நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் மின்சார செலவைக் குறைக்க தெர்மாகோல் பொருத்தப்பட்ட தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.