மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம்: பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நாங்கள் மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றார்.

ஹோனோலுலு:

1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை நேச நாடுகள் என்றும் எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒன்று சேர்ந்து போரிட்டன.

சுமார் ஆறாண்டுகள் நீடித்த இந்த இரண்டாம் உலகப்போரின் போது, ஹவாய் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தைத் தாக்க தனது படைகளுக்கு உத்தரவிட்டார் ஜப்பான் ராணுவ தளபதி ஜெனரல் டோஜோ.

யுத்த விதிகளின்படி முறையான முன்கூட்டியே அறிவிப்புச் செய்யாமல் எந்த நாடும் இன்னொரு நாட்டைத் தாக்கக் கூடாது. ஆனால் எச்சரிக்கை செய்தால் அமெரிக்கா உஷார் ஆகிவிடும் என்பதால் எதிர்பாராத திடீர் தாக்குதலை ஜப்பான் விமானப்படைகள் நடத்தின.

7-12-1941 அன்று 350-க்கும் அதிகமான ஜப்பான் போர் விமானங்கள் பயங்கரமான குண்டுகளை வீசி நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்கள், மற்றும் 300-க்கும் மேற்பட்ட போர்விமானங்கள் சேதமடைந்தன.

அமெரிக்காவை சேர்ந்த சுமார் 2400 வீரர்கள் கொல்லப்பட்டனர். தனது கடற்படைதளத்தைத் தாக்கியதால் கோபம் கொண்ட அமெரிக்கா, ஜப்பானுக்கு எதிரான உச்சக்கட்டப் போருக்கு தயாரானது. ஜப்பானை அடித்து ஒடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டது.

இதன் எதிரொலியாக ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி நடத்திய தாக்குதல், மனிதர்களால் உண்டாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பேரழிவாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பின்னர் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது.

இது ஒருபுறமிருக்க, ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் பகுதியை ஜப்பான் தாக்கிய நினைவுநாளின்போது அங்கு பலியான 2 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க வீரர்களுக்கு ஆண்டுதோறும் அமெரிக்க அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் நேற்று கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பலியான வீரர்களுக்காக எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ‘இதே இடத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் போரினால் பறிக்கப்பட்ட வீரர்-வீராங்கனைகளின் ஆன்மாக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

‘இனி இதைப்போன்ற போரின் பயங்கரங்களை தொடரக்கூடாது என்பதை ஜப்பான் நாட்டு மக்களான நாங்கள் உறுதிமொழியாக ஏற்கிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ‘இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு, சமரசத்தின் சக்தியை வெளிப்படுத்துகிறது’ என்று தெரிவித்தார்.

‘போரினால் ஏற்பட்ட ஆழமான காயங்கள்கூட, நட்புறவுக்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் என்பது இதன்மூலம் விளங்குகிறது’ என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.

முன்னதாக, பியர்ல் ஹார்பர் தாக்குதல் சம்பவத்துக்கு ஜப்பான் நாட்டு மக்களின் சார்பில் பிரதமர் ஷின்சோ அபே பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், இனி ஒருபோதும் போரில் ஈடுபட மாட்டோம் என்னும் பொருள்பட ஷின்சோ அபே பேசியுள்ளது, குறிப்பிடத்தக்கது.