மார்க்கம் பொங்கல் விழா – ஊடகச்சந்திப்பு

மார்க்கம் பொங்கல் விழா எதிர்வரும் ஜனவரி 14ம் 15ம் திகதிகளில் வழக்கம்போல் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் விழா பற்றிய தகவல்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கோடு 02-01-2017 அன்று மாலை 6 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பு, மார்க்கம் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பல்வேறு ஊடகங்களைச் சார்ந்தோரும் தமிழ் மரபியல் மைய உறுப்பினர்களும் ஏற்பாட்டுக் குழுவினரும் அங்கு குழுமியிருந்தனர்.

ஓவியர் மருது வரைந்த ஜல்லிக்கட்டுக் காளையின் ஓவியம் இந்த பொங்கல் விழாவின் கருப்பொருள் போன்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஏற்பாட்டுக்குழுவில்; ஒருவரான திரு. பொன்னையா விவேகானந்தன் அகவணக்கத்தோடு நிகழ்ச்சியை ஆரம்பித்தார். வரவேற்போடு அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மார்க்கம் பொங்கல் விழா பற்றிய தெளிவான விளக்கங்களை திரு லோகன் கணபதி வழங்கினார். இந்த மண்ணில் மரபுகள், பண்பாட்டுத் தொடர்ச்சிகள் பேணப்பட வேண்டியதன் அவசியத்தைத் தன் உரையின் போது வலியுறுத்தினார். 2011ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி, தைமாதம் 13ம் 14ம் நாட்கள் தமிழர் மரபுரிமை நாட்களாக, மார்க்கம் மாநகரசபையால் அங்கீகரிக்கப்பட்டமையும் அதன்பின் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் பொங்கல் விழா உயர்ந்த பெறுமானத்தை இலக்காகக் கொண்டு நடைபெறுவதையும் குறிப்பிட்டார்.

இருநாள் விழாவிலும் வடமாகாண முதல்வர் கலந்துகொள்ளவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் வெளியிட்டார். வரலாற்று முக்கியத்துவம் இரட்டை நகர உடன்படிக்கை பொங்கலன்று மார்க்கம் நகர மண்டபத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது என்பதையும் குறிப்பிட்டார். இருநாட்களும் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் பற்றியும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவரும் கணையாழி இதழ் தனது தை மாத இதழைக் கனடாச் சிறப்பிதழாக வெளியிடவுள்ளது. இச்செய்தியைக் கணையாழி இதழின் கனடா இணைப்பாளராகப் பணியாற்றும் திருமதி கார்த்திகா பார்த்திபன் கூறினார். இந்த இதழ் ஜனவரி 14ம் திகதி 3 மணியளவில் பொங்கல் விழா நிகழ்வுகளில் ஒன்றாக மார்க்கம் நகர மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கின்றது என்பதையும் குறிப்பிட்டார். இந்த வெளியீட்டில் கணையாழி இதழின் ஆசிரியர் திரு இராசேந்திரன் கலந்துகொள்ளவுள்ளார் என்ற செய்தியும் பகிரப்பட்டது.

ரொரான்ரோவில் வாழ்ந்துவரும் ஓவியக்கலைஞரான திரு கருணாவின் ஓவியங்களும் அங்கே காட்சிக்கு வைக்கப்படவிருப்பதாகவும் அங்கு கூறப்பட்டது.

இந்தப் பொங்கல், விழா ‘ நபொங்கல்’ என்ற பெயரால் முகநூல்களிலும் வலைத்தளங்களிலும் நேரலைக் காட்சிகளாக ஒளிப்பரப்படவிருப்பதை மாயவன் தெரிவித்தார்.

மார்க்கம் பொங்கல் விழா, மார்க்கம் என்ற வட்டத்துக்கு அப்பால் அனைத்துத் தமிழ் மக்களுக்குரியதாகும், அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இருநாட்களும் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் கீழே தரப்படுகின்றன.

தமிழ்விழா

சனிக்கிழமை ஜனவரி 14

காலை 10:00 – ஆடல், சிலம்பம், யோகக் கலைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை

நண்பகல்12:00 – ஓவியக்கலைஞர் கருணாவின் ஓவியக் கண்காட்சி தொடக்கி வைக்கப்படும்.

பிற்பகல் 3:00 – கணையாழி சஞ்சிகை ‘கனடாச் சிறப்பிதழ்’ அறிமுகம்

மாலை 6:00 – வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வடமாகாண முதல்வர் சி.வி.
விக்னேஸ்வரன் மாநகரசபை மேயர் பிராங் ஸ்கார்பிற்றி பங்கேற்கும் இரட்டைநகர உடன்படிக்கை கைசாத்து.

பொங்கல் திருவிழா

சனிக்கிழமை ஜனவரி 15 – பிலேற்றோ மார்க்கம் கலையரங்கம் (Flato Markham Theatre)

பிற்பகல் 2 முதல் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.

• தமிழர் பண்பாடு, வாழ்வியல் மரபுகளை வெளிபடுத்தும் கலை நிகழ்வுகள்
• மூத்த கலைஞர் மதிப்பளிப்பு
• பொங்கல் விழாமலர் வெளியீடு என்பன முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக
வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்கின்றார்.