மான் வேட்டை: சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

கடந்த 1998 ம் ஆண்டில் இரண்டு அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து ஜோத்பூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ராஜ்ஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பரில் ”ஹம் சாத் ஹம் சாத் ஹயெ்ன்” என்ற ஹிந்தி படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பகாவாத் வனப்பகுதியில்,சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான்,52, சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த ஐகோர்ட் சல்மான் கானை விடுதலை செய்தது. ஆனால், ராஜஸ்தான் அரசு சல்மான்கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த வழக்கு ஜோத்பூர் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், மார்ச் 28-ம் தேதி விசாரணை நிறைவடைந்தன. வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேவ்குமார் காத்ரி ஒத்தி வைத்தார்.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளித்தார். நடிகர் சயீப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

. பிற்பகலில் சல்மானுக்கான தண்டனை விபரத்தை அறிவி்த்த நீதிபதி, சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனையடுத்து இன்றே சல்மான் கான் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.