மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் – சிவசேனை

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர் அதில் பங்கேற்றிருந்தனர்.

அங்கு உரையாற்றிய போது சச்சிதானந்தம் வெளியிட்ட கருத்தே இங்கு தமிழ் மற்றும் ஏனைய சில சமூகங்களின் மத்தியில் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது.

இலங்கையை ஒரு பௌத்த – இந்து நாடு என்று வர்ணித்த சச்சிதானந்தம், “இது வேறு சமூகத்தவர்களுக்கான நாடு அல்ல, இங்குள்ள பாரம்பரியத்தை ஏற்று நடக்காதவர்கள், நாட்டைவிட்டு வெளியேறி தமது பாரம்பரியங்களை பின்பற்றும் நாடுகளுக்கு போகலாம்” என்று கூறினார்.

சவுதி அரேபியாவில் பாதிப்பேர் இஸ்லாம் அல்லாதவர்கள் என்றும் ஆனால், அங்கு இஸ்லாத்துக்கு பொருந்தாத பன்றி இறைச்சியை யாரும் உண்ண முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இங்கு மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமது ஊரில் மாட்டிறைச்சி கடைகள் எப்போதும் இருந்ததில்லை என்றும் சமீபத்தில்தான் அவை, வெளியில் இருந்து வந்தவர்களால் புகுத்தப்பட்டதாகவும் சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.