மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்தார். அங்கும் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் தமிழக மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

அப்போது, சென்னை உட்பட தமிழகத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் விளக்கினார். தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.

இதைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.