மல்லையா அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தினால் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை: சிபிஐ

நிதிமுறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் சென்று விடக்கூடாது என்ற காரணத்தினால்தான் விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை அனுப்பியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இப்படிக் குறிப்பிடும்போது மல்லையா மீது குற்றச்சாட்டுகள் எழும்பிய நிலையில் அவர் இந்தியாவிலிருந்து லண்டன் தப்பிச் சென்றதையும் சிபிஐ கோர்ட்டில் சுட்டிக்காட்டி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான எச்சரிக்கை நடவடிக்கையின் நியாயத்தை கோர்ட்டில் எடுத்துரைத்தது சிபிஐ.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் நீதிபதி எம்.துரைசாமியிடம் கூறும்போது “மல்லையா அனுபவத்திற்குப் பிறகே குடியேற்றத் துறைக்கு மத்திய அரசு கோரிக்கை ஒன்றை வைத்தது, அதாவது நிதிமுறைகேடு விசாரணைகளி இருப்பவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று விடாமல் இருப்பதை உறுதி செய்யக் கேட்டுக் கொண்டது” என்றார்.

முன்னதாக, தேடப்படும் நபர் என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமென கார்த்தி சிதம்பரம் மனு செய்திருந்தார். இந்த விசாரணையின் பொது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், கார்த்தி சிதம்பரத்திடம் வெளிநாடு செல்ல மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால் சுற்றறிக்கையைத் திரும்ப பெறலாம் என்றார்.

நீதிபது துரைசாமி, மனுதாரர்களின் கோரிக்கைக்கேற்ப சுற்றறிக்கையை கார்த்தி சிதம்பரம் பார்க்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இதற்கு சொலிசிட்டர் ஜெனர. இது ரகசியமான ஆவணம், மனுதாரர்களுக்கு காட்டப்பட முடியாதது என்றார்.

இதற்கு துரைசாமி, “சுற்றறிக்கையின் நகல் மனுதாரர்களிடம் காண்பிப்பதுதான் நியாயம், அவர்களுக்கு அதற்கான உரிமை இருக்கிறது” என்றார்.

லுக் அவுட் சர்க்குலர் ஏன் அனுப்பப்பட்டது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நீதிபதிக்கு விளக்கினார், அப்போது, “இருமுறை சம்மன் அனுப்பியும் விசாரணை குழு முன் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. விசாரணை குழுவின் முன் இவர் ஆஜராகியிருந்தால் இந்தக் கேள்விக்கே இடமில்லை. ஆஜராகாத போது மனுதாரரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாது” என்றார்.

கார்த்தி சிதம்பரம் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரண், விசாரனை முகமை அனுப்பிய சம்மன்களில் முதல் சம்மனுக்கு கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர்கள் மூலம் பதில் அளித்தார், 2-வது சம்மன் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்பட்டுள்ளது, இப்படியிருக்கையில் ஒவ்வொரு எஃப்.ஐ.ஆருக்கும் லுக் அவுட் சர்க்குலர் அனுப்பப்படுகிறதா என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.